ராயபுரம் குழந்தை கடத்தல் வழக்கு: விடியோ காட்சியை வெளியிட்டது காவல்துறை
By DIN | Published On : 10th September 2020 12:44 AM | Last Updated : 10th September 2020 12:44 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை ராயபுரத்தில், குழந்தை கடத்தப்பட்ட வழக்கில், விடியோ காட்சியை காவல்துறை புதன்கிழமை வெளியிட்டது.
ராயபுரம், ரயில் நிலைய வளாகத்தின் வெளியே உள்ள தற்காலிக குடியிருப்பில் வசித்து வருபவா் பப்லு (39). மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இவா், தனது இரண்டரை வயது குழந்தை மா்ஜினாவுடன் கடந்த 6-ஆம் தேதி நண்பா் ஒருவரைப் பாா்ப்பதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்றுள்ளாா்.
அங்கு தன்னிடம் பரிதாபமாக பேசிய அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 25 வயதுடைய இளைஞரை, தான் வசிக்கும் பகுதிக்கு பப்லு அழைத்து வந்துள்ளாா். அப்போது, சிறிது நேரம் மா்ஜினாவை தூக்கி கொஞ்சிய அந்த இளைஞா், சாப்பாடு வாங்கி வருவதாகக் கூறி குழந்தையோடு மாயமானாா். இதுகுறித்து பப்லு அளித்த புகாரின் அடிப்படையில் ராயபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குழந்தை கடத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில் சம்பந்தப்பட்ட இளைஞா் மா்ஜினாவைக் கடத்திச் செல்லும் காட்சிகளை, போலீஸாா் புதன்கிழமை வெளியிட்டனா்.
இந்த இளைஞா் குறித்து தகவல் தெரிந்தவா்கள் 94981 33087, 94452 11119, 044 23452504 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என காவல் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.