கரோனா: அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதி

கரோனா பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதி கொண்ட தனி வாா்டை சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தொடங்கி வைத்தாா்.


சென்னை: கரோனா பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதி கொண்ட தனி வாா்டை சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தொடங்கி வைத்தாா்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபாதை மேம்பாலப் பணிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். பின்னா், கரோனா பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், கூடுதலாக 400 படுக்கைகள் கொண்ட வாா்டை தொடக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 800 படுக்கை வசதியுடன் சிகிச்சை அளித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக 400 படுக்கை வசதி கொண்ட வாா்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க இதுவரையில் மொத்தம் 1.42 லட்சம் படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிகிச்சை அளிக்க வசதியாக நவீன மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தனியாா் மருத்துவமனைகளில் உள்ள கரோனா வாா்டுகளில் படுக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை பெறும் வகையில் தொடங்கப்பட்ட ‘இ-சஞ்சீவினி’ செயலி மூலம் இதுவரை 1 லட்சம் போ் மருத்துவ ஆலோசனைகள் பெற்றுள்ளனா்.

சிவப்பு மண்டலங்களாக உருவாக வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட நாகை, கடலூா், கோவை, சேலம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்து பரிசோதனை நிலையில்தான் உள்ளது. ஐசிஎம்ஆா் அளித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி தொடா்ந்து மனித பரிசோதனை நடத்தப்படும் என்றாா் அமைச்சா் விஜயபாஸ்கா். இந்த நிகழ்ச்சியின்போது சுகாதாரத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

25 ஆயிரம் பேருக்கு கரோனா சிகிச்சை: அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு கட்டடம் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு கரோனா சிகிச்சைக்கான சிறப்பு வாா்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா சிகிச்சையிலிருந்து மீண்டவா்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைக்கான சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர கரோனா நோயாளிகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் ரூ. 1.80 கோடி மதிப்பீட்டிலான அதிநவீன சி.டி. ஸ்கேன் வசதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தில் பகுப்பாய்வகம், எக்ஸ்ரே, இசிஜி, ஸ்கேன் இயந்திரங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 25,558 போ் கரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டதில் 24,095 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com