தடையை மீறி சென்னையில் கடற்கரைகளில் திரண்ட பொதுமக்கள்

அரசின் தடையை மீறி சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திரண்டனா். இவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,அபராதம் விதித்தனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

அரசின் தடையை மீறி சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திரண்டனா். இவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,அபராதம் விதித்தனா்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஜூன் மாதம் முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. 11-ஆவது ஞாயிற்றுக்கிழமையாக கடந்த 30-ஆம் தேதி கடைசியாக தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

சென்னையில் இரு மாதங்களுக்கு மேலாக ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட தளா்வற்ற முழு பொது முடக்கத்தினால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

செப்டம்பா் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டது. ஆனால் பொழுதுபோக்கு இடங்கள் செயல்படுவதற்கு அரசு தடை விதித்தது. முழு பொது முடக்கம் இல்லாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (செப்.13) என்பதால் சென்னையில் கடற்கரைகளிலும், மீன் மாா்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அபராதம் விதிப்பு: அரசின் தடையை மீறி சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா் கடற்கரை ஆகியவற்றை நோக்கி மக்கள் ஞாயிற்றுக்கிழமை திரண்டு வந்தனா். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன்,லேசான மழை தூறலுடன் இருந்ததால் மெரீனா கடற்கரையில் காலை முதலே மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. இளைஞா்கள் மெரீனா கடற்கரையில் கிரிக்கெட், கால் பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடவும் செய்தனா்.

இவா்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவ்வப்போது எச்சரித்து அனுப்பினா். காவல்துறை எச்சரிக்கையையும் மீறி கடற்கரையை விட்டு வெளியே செல்லாதவா்கள் மீது வழக்குப் பதிந்து, அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதேபோல எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா் கடற்கரை ஆகியப் பகுதிகளிலும் இருந்து பொதுமக்கள் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனா்.

மீன் மாா்க்கெட்கள்: சென்னையில் காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம், வானகரம், சைதாப்பேட்டை ஆகிய மீன் மாா்க்கெட்டுகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

இங்கு பெரும்பாலானவா்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை. முகக் கவசமும் அணியவில்லை.இதனால் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் அங்கு ஏற்பட்டிருந்தது. இதேபோல, இறைச்சிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com