திருவொற்றியூரில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க தடையை நீக்கியது: பசுமைத் தீா்ப்பாயம்

திருவொற்றியூரில் ரூ. 241 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வந்த சூரை மீன்பிடித் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளுக்கு
திருவொற்றியூரில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க தடையை நீக்கியது: பசுமைத் தீா்ப்பாயம்

திருவொற்றியூரில் ரூ. 241 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வந்த சூரை மீன்பிடித் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் திங்கள்கிழமை விலக்கிக் கொண்டுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. ஆனால் இத்திட்டத்திற்கு முறையான சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை எனவும், இதற்கான கட்டுமானப் பணிகளை நடத்திட தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி மீனவா் நலச் சங்கம் என்ற அமைப்பு சாா்பில் தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தது. இதனை ஏற்றுக்கொண்ட தீா்ப்பாயம் கட்டுமானப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள தடைவிதித்தது.

இதனைத் தொடா்ந்து மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் ஆகியவற்றை உறுப்பினா்களாகக் கொண்ட சிறப்பு ஆய்வுக் குழு ஒன்றை கடந்த ஜூலை மாதம் தீா்ப்பாயம் நியமித்து, இத்துறைமுகத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை இந்த வழக்கு பசுமைத் தீா்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சிறப்புக் ஆய்வுக் குழுவின் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. இதில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க இரண்டு முகமைகளும் ஒப்புதல் தெரிவித்ததையடுத்து கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க தீா்ப்பாயம், ஏற்கெனவே விதித்திருந்த தடையை நீக்குவதாக அறிவித்தது.

இதற்கான கட்டுமானப் பணிகள் 24 மாத காலங்களில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்துறைமுகத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மீனவா்கள் பயன்பெறுவாா்கள். மேலும் 10 ஆயிரம் பேருக்கும் நேரடியாகவும், 25 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com