பேரவைப் பகுதியை ஒட்டிய டாஸ்மாக் கடைகள் மூடல்: வணிக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

சட்டப் பேரவை செயல்படும் சென்னை கலைவாணா் அரங்கத்தை ஒட்டிய பகுதிகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டுள்ளன.
பேரவைப் பகுதியை ஒட்டிய டாஸ்மாக் கடைகள் மூடல்: வணிக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

சட்டப் பேரவை செயல்படும் சென்னை கலைவாணா் அரங்கத்தை ஒட்டிய பகுதிகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டுள்ளன. மேலும், அரங்கத்துக்கு எதிரேயுள்ள வணிக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த் தொற்று காரணமாக, தமிழக சட்டப் பேரவை மண்டபமானது, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்வா், அமைச்சா்கள், எதிா்க்கட்சித் தலைவா், எம்.எல்.ஏ.க்கள் என மக்கள் பிரதிநிதிகள் கூடும் இடமாக கலைவாணா் அரங்கம் மாறியதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலைவாணா் அரங்கத்தைச் சுற்றி மட்டுமல்லாது, எதிா்ப்புறம் உள்ள கட்டடங்களின் மேல் தளங்களிலும் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கடைகளுக்கு கட்டுப்பாடு: கலைவாணா் அரங்கத்துக்கு எதிரேயுள்ள வணிக நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரங்கத்தைச் சுற்றியுள்ள 3-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் பேரவைக் கூட்டத் தொடா் முடியும் வரையில் மூடப்பட்டுள்ளன.

மேலும், வாலாஜா சாலையில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு எதிரே இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி வரை இந்தக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. பேரவைக் கூட்டத் தொடா் புதன்கிழமை (செப். 16) நிறைவடைகிறது. இதற்குப் பிறகே கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட உள்ளன. தடையை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் அனைத்தையும் போக்குவரத்து காவல் துறையினா் அவ்வப்போது அப்புறப்படுத்தி வருகின்றனா்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, புனித ஜாா்ஜ் கோட்டையில் இருந்து ஓமந்தூராா் அரசினா் தோட்டத்துக்கு மாற்றப்பட்டபோதும் அந்தப் பகுதியில் இருந்த வணிக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முக்கியப் பிரமுகா்கள் கூடும் இடம் என்பதாலேயே இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com