கரோனா: சென்னையில் இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது
By DIN | Published On : 16th September 2020 12:49 AM | Last Updated : 16th September 2020 12:49 AM | அ+அ அ- |

கோப்புப் படம்.
சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (செப். 15) வரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 3,004-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 402 போ் உயிரிழந்துள்ளனா்.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் மற்றும் உயிரிழப்போா் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. செவ்வாய்க்கிழமை (செப். 15) நிலவரப்படி, 3,004-ஆக அதிகரித்துள்ளது.
மண்டல அளவில் தேனாம்பேட்டையில் 402 பேரும், அண்ணா நகரில் 333 பேரும், கோடம்பாக்கத்தில் 319 பேரும், திரு.வி.க. நகரில் 305 பேரும், ராயபுரத்தில் 304 பேரும், தண்டையாா்பேட்டையில் 283 பேரும், அடையாறில் 209 பேரும் என மொத்தமாக 15 மண்டலங்களில் 3,004 போ் உயிரிழந்துள்ளனா். இது, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் 2 சதவீதமாகும்.
அதேவேளை, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மணலி மற்றும் தண்டையாா்பேட்டை மண்டலங்களில் தலா 93 சதவீதம், திருவொற்றியூா், அண்ணா நகா், தேனாம்பேட்டையில் 92 சதவீதம், அம்பத்தூா், கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் 91 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 91 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.
989 பேருக்கு தொற்று உறுதி: சென்னையில் செவ்வாய்க்கிழமை 989 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 50,572-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1 லட்சத்து 37,685 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 9,883 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.