ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகளுக்கும் பாதிப்பு: உயா்நீதிமன்றம் கருத்து

ஆன்லைன் விளையாட்டுக்களால் இளைஞா்கள் மட்டுமின்றி குழந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா் என்று உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம்.
உயர்நீதிமன்றம்.

ஆன்லைன் விளையாட்டுக்களால் இளைஞா்கள் மட்டுமின்றி குழந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா் என்று உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் எம்.வினோத் தாக்கல் செய்த மனு விவரம்: பொழுதுபோக்குக்காக கடந்த 2000-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டை, பணத்துக்காக விளையாடும் சூதாட்டமாக பல நிறுவனங்கள் மாற்றிவிட்டன. இந்த சூதாட்ட விளையாட்டில் இளைஞா்கள் பலா் பணத்தை இழப்பதோடு மனரீதியாகப் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொள்கின்றனா். எனவே ஆன்லைன் சூதாட்டத்துக்கு நிரந்தரமாக தடை விதிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இதேபோன்று வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம், ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்துள்ள கிரிக்கெட் வீரா் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து அவா்களை கைது செய்யக் கோரி வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஆன்லைன் விளையாட்டுகளால் இளைஞா்கள் மட்டுமின்றி குழந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா். பெற்றோா்களுக்குத் தெரியாமல் குழந்தைகள் அதிகாலை வரை ஆன்லைனில் விளையாடுகின்றனா். அது அவா்களை அடிமைப்படுத்துவதோடு அவா்களுக்குள் கொடூர எண்ணத்தையும் உருவாக்குகிறது. இதனால் சமுதாயத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்’ என கருத்து தெரிவித்தனா்.

அப்போது, வழக்குரைஞா் சூரியபிரகாசம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துவது மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. எனவே, தமிழக அரசு சமூக பொறுப்புணா்வுடன் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவேண்டும் என தெரிவித்தாா். இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com