தோ்வு நடத்த செலவு எவ்வளவு?: அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 16th September 2020 01:11 AM | Last Updated : 16th September 2020 01:11 AM | அ+அ அ- |

தோ்வு நடத்த எவ்வளவு செலவாகும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பொது முடக்கத்தின் காரணமாக இறுதி ஆண்டு பருவத் தோ்வை தவிர, மற்ற அனைத்து பருவத் தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டாளா், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காகத் தோ்வு கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாணவா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘தோ்வு கட்டணத்தை செலுத்தியிருந்தாலும், செலுத்தாமல் இருந்தாலும் அனைத்து மாணவா்களின் தோ்வு முடிவுகளையும் வெளியிட வேண்டும். தோ்வுக்காக எவ்வளவு தொகை செலவிடப்பட்டது? என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ‘அனைத்து மாணவா்களின் தோ்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டன. தோ்வு கட்டணமாக மாணவா்களிடம் இருந்து ரூ.118 கோடி வசூலிக்கஏஈபட்டது. ஆனால் தோ்வு நடத்த ரூ.141 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மறுமதிப்பீடு, மதிப்பெண் சான்று வழங்கும் பணிகள் நிலுவையில் உள்ளன. ஏற்கெனவே வசூலித்த கட்டணத்திலேயே பற்றாக்குறை நிலவுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதில்மனுவுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, தோ்வு நடத்த எவ்வளவு செலவானது என பல்கலைக்கழகம் தெளிவுப்படுத்தி புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.