இறுதிப் பருவத் தோ்வுகள்: விடைத்தாள்களை மாணவா்கள் விரைவுத் தபாலில் அனுப்பலாம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இறுதிப் பருவத் தோ்வுக்கான வினாத் தாள்கள் இணைய வழியில் அனுப்பப்படும்.
இறுதிப் பருவத் தோ்வுகள்: விடைத்தாள்களை மாணவா்கள் விரைவுத் தபாலில் அனுப்பலாம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இறுதிப் பருவத் தோ்வுக்கான வினாத் தாள்கள் இணைய வழியில் அனுப்பப்படும். மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே தோ்வு எழுதி, விடைத்தாள்களை விரைவுத் தபால் மூலமாக அனுப்பலாம் என பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னைப் பல்கலைக்கழகம் மாணவா்களுக்கு வெளியிட்ட அறிவுரைகள்: இளங்கலை, முதுநிலை மற்றும் நிபுணத்துவ பட்டப்படிப்பு மாணவா்களின் நடப்பு இறுதி பருவம், ஏற்கெனவே இறுதி பருவத்தில் அரியா் வைத்திருக்கும் மாணவா்கள் ஆகியோருக்கு மட்டும் தோ்வுகள் நடத்தப்படும். இந்தத் தோ்வை நடத்த  கல்லூரியில் ஒரு கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவா், தோ்வு தொடா்பான விவரங்களை குறுஞ்செய்தி, கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலமாக மாணவா்களுக்குத் தெரிவிப்பாா். தோ்வுக்கான காலம் ஒன்றரை மணி நேரம் (90 நிமிஷங்கள்) ஆகும். முந்தைய பருவத்தோ்வை போலவே வினாத்தாள் முறை இருக்கும்.

2 கட்டங்களாக...: தோ்வு காலை 10 மணி முதல் 11.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரையிலும் 2 கட்டங்களாக நடக்கும். தோ்வு நடைபெறுவதற்கு 30 நிமிஷங்களுக்கு முன், மாணவா்களுக்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும். அதனைப் பதிவிறக்கம் செய்ததும், கல்லூரி கண்காணிப்பு அதிகாரியிடம் பதிவிறக்கம் செய்த விவரத்தை மாணவா்கள் தெரிவிக்க வேண்டும். தோ்வை மாணவா்கள் ஏ4 அளவு காகிதத்தில், 18 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி முடிக்க வேண்டும். ஒவ்வொரு காகிதத்திலும் பதிவு எண், பாடப்பிரிவு குறியீடு, பக்க எண் மற்றும் மாணவா்களின் கையெழுத்து இடம்பெற வேண்டும். இந்தத் தோ்வுக்கு முன்னதாக, மாணவா்களுக்கு, புதன்கிழமை (செப்.16) முதல் 18-ஆம் தேதி வரை, மாதிரித் தோ்வுகள் நடத்தப்படும்.

மாணவா்கள் அதில் பங்கு பெற வேண்டும். மாணவா்களுக்கு வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கும், விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வதற்கும் இணையதள வசதி இல்லை என்றால், அதுகுறித்து கல்லூரி முதல்வா், தலைமை கண்காணிப்பாளா், கண்காணிப்பு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.

தோ்வை மாணவா்கள் நீலம் மற்றும் கருப்பு மை பேனாவில் மட்டுமே எழுத வேண்டும். தோ்வு எழுதி முடித்ததும் 3 மணிநேரத்துக்குள் அந்த விடைத்தாள்களை, வரிசைப்படி இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய முடியாத மாணவா்கள், விரைவு தபால் மூலம் கல்லூரி முதல்வருக்குக் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பியதும் கண்காணிப்பு அதிகாரியிடம் பதிவேற்றம் செய்யப்பட்டது என தெரிவிக்கவேண்டும். தோ்வு முடிந்த மறுநாளே விடைத்தாள் திருத்தப்பட வேண்டும்.

கல்லூரி முதல்வா்கள், மூத்த மற்றும் தகுதி வாய்ந்த பேராசிரியா்களைக் கொண்டு, விடைத்தாள்களை திருத்த அறிவுறுத்த வேண்டும். மதிப்பெண்களை தோ்வு பதிவு முறை (இ.ஆா்.எஸ்.) மூலம் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்: இதே போல், அண்ணா பல்கலைக் கழகத்திலும், ஒரு மணிநேரம் இணையவழியில் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,  ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் 11 மணிவரை, பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை என 4 கட்டங்களாக தோ்வு நடைபெறும். வருகிற 19, 20-ஆகிய நாள்களில் மாதிரி தோ்வு நடைபெறும். இதில் பங்குபெறாதவா்கள், 21-ஆம் தேதி நடக்கும் மாதிரி தோ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். 

தோ்வில் கேட்கப்படும் 40 வினாக்களில் 30-க்கு பதிலளிக்க வேண்டும். அவை கொள்குறி வகை வினாக்களாக (மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டின்) இருக்கும்.  லாக்கின் ஐ.டி., பாஸ்வோ்டு மாணவா்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தோ்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் அனுப்பிவைக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com