நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர் பதவிக் காலம் டிசம்பர் வரை நீட்டிப்பு

கர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதன்கிழமை தாக்கல் செய்தார். 
இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா நோய்த் தொற்று காரணமாக அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட அளவு ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அரசு இயந்திரம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. எனவே, மறுசீரமைக்கப்பட்ட புதிய ஒன்பது மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளை வரையறுப்பதற்கான அறிவிக்கையையும், சாதாரண தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாட்டுப் பணிகளையும் திட்டமிட்டபடி நிறைவேற்ற இயலவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் எல்லை மறுவரையறை அறிவிக்கைக்குப் பிறகு புதிதாக மறுசீரமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் இடஒதுக்கீடு அறிவிக்கப்படுதல் வேண்டும். அதன்பிறகே, தேர்தலுக்கான அட்டவணையை அறிவிக்கை செய்ய முடியும்.  இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து, ஏற்கெனவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்த இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக பேரவையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை திமுக அறிமுக நிலையிலேயே எதிர்த்தபோதும், குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com