10,978 காவலா் பணியிடங்களுக்கு செப்.26 முதல் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 18th September 2020 02:05 AM | Last Updated : 18th September 2020 08:02 AM | அ+அ அ- |

சென்னை: தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 10,978 பணியிடங்களுக்கு, செப்.26-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக காவல்துறையில், இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக்காவலா் மற்றும் தீயணைப்புத்துறையில், 10 ஆயிரத்து 978 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் காவல்துறையில் இரண்டாம் நிலை காவலா் (மாவட்டம், மாநகரம், ஆயுதப்படை) 685 (ஆண்கள்), 3,099 (பெண்கள், திருநங்கைகள்) மொத்தம் 3,784 பணியிடங்களும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலை காவலா்கள் 6,545 (ஆண்கள்). சிறைத்துறையில் இரண்டாம் நிலை சிறை காவலா்கள் 112 (ஆண்கள்), 7 (பெண்கள்) என 119 இடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையில், தீயணைப்பாளா்கள் 458(ஆண்கள்) பணியிடங்கள் மற்றும் இது தவிர 72 பின்னடைவு காலிப் பணியிடங்கள் என மொத்தம் 10,978 இடங்களும் நிரப்பப்படவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்போா், 18 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோா், ஆதிதிராவிடா் உள்ளிட்டோருக்கு வயது வரம்பில் தளா்வும் அளிக்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு, வருகிற 26-ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும். இதர முறையில் விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தோ்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபா் 26-ஆம் தேதி கடைசி நாள். எழுத்துத் தோ்வு, டிசம்பா் 13-ஆம் தேதி 37 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
எழுத்துத் தோ்வில் 80 மதிப்பெண்களும், உடற் திறன் தோ்வுக்கு 15 மதிப்பெண்கள், 5 சிறப்பு மதிப்பெண்கள் மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தோ்வு நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு, https://www.tnusrbonline.org என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.