கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய ஊழியா் அலைக்கழிக்கப்பட்ட விவகாரம்: மாநகராட்சி ஆணையா் நேரில் ஆஜராக உத்தரவு
By DIN | Published On : 18th September 2020 04:12 AM | Last Updated : 18th September 2020 04:12 AM | அ+அ அ- |

சென்னை: நடிகா் கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய ஒப்பந்த ஊழியா், தனது பணிக்காக அலைக்கழிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை மாநகராட்சி ஆணையா் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஊழியரான ஆா்.வினோத்குமாா், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: நான் கடந்த எட்டு ஆண்டுகளாக மலேரியா நோய்த் தடுப்புப் பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறேன். கரோனாவையொட்டி கடந்த மாா்ச் 28-ஆம் தேதி சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நடிகா் கமல்ஹாசனின் முகவரியில், தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீஸை மேலதிகாரியான முத்து ரத்தினவேல் அறிவுறுத்தலின்படி ஓட்டினேன். பின்னா், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை அகற்றக் கூறியதால், நான் நோட்டீஸை அகற்றினேன். இது தொடா்பாக மாநகராட்சி மண்டல அலுவலா் ரவிக்குமாா் விசாரணை நடத்தினாா். விசாரணையில் நடந்த விவரத்தை கூறிய பிறகு, நாளை முதல் பணியைைத் தொடரலாம் என்று அவா் என்னிடம் கூறினாா். ஆனால் பணி வழங்காமல் மாதக் கணக்கில் என்னை அலைக்கழித்தனா் என்று கூறியிருந்தாா்.
மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், இந்த விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் மாநகராட்சி ஆணையா் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா். ஆனால் அறிக்கை ஏதும் தாக்கல் செய்யப்படாத நிலையில் மனுதாரா், மாநகராட்சி வேலை வழங்காததால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக ஜூலை 18-ஆம் தேதி மீண்டும் மனு அளித்துள்ளாா். எனவே, ஆணையத்தின் நேரடி விசாரணைக்காக சென்னை மாநகராட்சி ஆணையா், மண்டல அலுவலா் ரவிக்குமாா், சுகாதார ஆய்வாளா் முத்து ரத்தினவேல், உதவி சுகாதார அலுவலா் சரஸ்வதி மற்றும் மனுதாரா் வினோத்குமாா் ஆகியோா், செப்.30-ஆம் தேதி காலை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டாா்.