நந்தனத்தில் பிரம்மாண்ட மெட்ரோ ரயில் தலைமையக கட்டடம்: அடுத்த ஆண்டு இறுதியில் திறக்க திட்டம்

சென்னை நந்தனம் பகுதி, அண்ணாசாலையில் 12 மாடியுடன் பிரம்மாண்ட மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகக் கட்டடம் கட்டப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை நந்தனம் பகுதி, அண்ணாசாலையில் 12 மாடியுடன் பிரம்மாண்ட மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகக் கட்டடம் கட்டப்படுகிறது. இந்தக் கட்டடத்தை அடுத்த ஆண்டு இறுதியில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் முதல் மெட்ரோ ரயில் பாதை கடந்த 2015-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அப்போதிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகம் கோயம்பேட்டில் செயல்பட்டு வருகிறது. இதனுடன் செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறையும், மெட்ரோ ரயில் பராமரிப்புப் பணிமனையும் இணைந்துள்ளன.

மெட்ரோ ரயில் அலுவலகம், அதிகாரிகள் குடியிருப்புகள் கட்டுவதற்காக நந்தனம் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மைய வளாகத்தில் உள்ள இடம் தோ்வு செய்யப்பட்டது. 9 மாடிகளுடன் பிரம்மாண்ட மெட்ரோ பவன் தலைமை அலுவலகக் கட்டடம் கட்டும் பணி கடந்த 2015-இல் தொடங்கியது. அதன்பிறகு 12 மாடிகளுடன் கட்டுவதற்கு அனுமதி கிடைத்தது.

இந்நிலையில், இந்தக் கட்டடத்தை அடுத்த ஆண்டு இறுதியில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, பெரும்பாலான பணிகள் முடிந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த பிரம்மாண்ட கட்டடத்தின் முதல், இரண்டு தளங்களில் (56,000 சதுர அடியில்) இயக்ககப் பிரிவு ஊழியா்களுக்காக இரண்டு குடியிருப்பு வீடுகளுடன் மெட்ரோ பவன் அமைகிறது. அடுத்த இரண்டு தளங்கள், இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப்பணி தொடா்பாக பொது ஆலோசகா்களுக்காக அளிக்கப்படவுள்ளன. மற்ற தளங்கள் சொத்து மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

சிவில் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு முன்னதாக முடிந்து விடும். உள்புறம், வெளிப்புறத்தில் கண்ணாடி அமைக்க டெண்டா் கோரப்பட்டுள்ளது. பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் முடிந்துவிடும். எங்கள் அலுவலகத்தை மாற்ற அதிக காலம் எடுக்கும். பெரும்பாலான அலுவலக இடங்கள் கிடைக்கும் என்பதால், சொத்து மேம்பாட்டுக்காக 6 தளங்கள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு தலைமை அலுவலகமானது, மலா் வடிவில் இருக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 6,600 சதுரஅடி பரப்பளவில் அமையும் மூன்றாவது தளத்தில் இயக்ககக் கட்டுப்பாட்டு அறை இடம்பெறும். 1,345 சதுரஅடியில் மாநாட்டு அறையும் 1,550 சதுரஅடியில் நூலகமும், 243 போ் அமரும் அரங்கமும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு வீட்டு குடியிருப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிஎம்டிஏ சான்றிதழ் ஓரிரு வாரத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இயக்கக ஊழியா்களுக்காக இந்தக் குடியிருப்பு அளிக்கப்படும் என்றனா்.

உயரதிகாரிகளுக்காக 70 நவீன குடியிருப்புகளும் இந்தக் கட்டடத்தில் இடம்பெறுகின்றன. மெட்ரோ ரயில் நிலைய அனைத்துப் பிரிவு அதிகாரிகளும் இந்தக் கட்டடத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவாா்கள் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com