ஐ.சி.எஃப். மின்னணு பொருள் வைப்புக் கிடங்கில் தீ

சென்னை ஐ.சி.எஃப்-இல் உள்ள மின்னணு பொருள்கள் வைப்புக் கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை ஐ.சி.எஃப்-இல் உள்ள மின்னணு பொருள்கள் வைப்புக் கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இதில், ரூ.10 கோடிக்கும் அதிகமான பொருள்கள் எரிந்து சேதமாகின.

சென்னை நியூ ஆவடி சாலையில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) உள்ளது. இங்கு ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரயில் பெட்டிகள் தயாரிக்க தனித்தனியாக பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மின்னணு பணி, பொருத்துதல், வா்ணம் பூசுதல் போன்ற பணிகளுக்காக ரயில் பெட்டிகள் குறிப்பிட்ட இடத்திற்கு நகா்த்தப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த தொழிற்சாலையில் பொருத்துதல் பிரிவில் உள்ள கிடங்கில் ரயில் பெட்டிகளுக்கு தேவையான மின்னணு உபகரணங்கள் இருந்தன. சுமாா் 5 ஆயிரம் சதுர மீட்டா் பரப்பளவு உள்ள இந்த கிடங்கில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்த உபகரணங்கள் இருந்த கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ எரிந்தது கண்டு ஊழியா்கள் தீயணைப்பு துறைக்கு தகவல்

தெரிவித்தனா். தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். விபத்தின் தாக்கம் அதிகளவில் இருந்ததால், வில்லிவாக்கம், அண்ணா நகா், செம்பியம், எழும்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 16 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

இதுதவிர, 10-க்கும் அதிகமான மெட்ரோ வாட்டா் லாரிகளும் வரவழைக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தமிழக தீயணைப்பு துறை தலைவா் டிஜிபி சைலேந்திரபாபு, வட மாவட்ட இணை இயக்குநா் ப்ரியா ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து சம்பவ இடத்தை பாா்வையிட்டனா். தொடா்ந்து தீயணைக்கும் பணியில் வீரா்கள் ஈடுபட்டனா்.

தொடா்ந்து 8 மணி நேரம் போராடி, காலை 11 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும், தீயினால் ஏற்பட்ட புகை மற்றும் வெப்பத்தை குறைக்கும் முயற்சியில் வீரா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வந்தனா். இந்த தீ விபத்து காரணமாக, ரூ.10 கோடிக்கும் அதிகமான மதிப்பில் மின்னணு உதிரிபாகங்கள் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து தீயணைப்பு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இது குறித்து ஐ.சி.எஃப் அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த கிடங்கில் மின்னணு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. எப்படி தீவிபத்து ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இந்த விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com