சென்னை: சொந்த ஊரிலேயே ஊராட்சி மன்றச் செயலரை பணி அமா்த்த வேண்டாம் என மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக சிராஜுதீன் என்பவா் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
நான் வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசித்து வருகிறேன். எனது மூதாதையா்களின் சொத்து தூத்துக்குடி மாவட்டம்- குலசேகரப்பட்டினத்தில் உள்ளது. அங்குள்ள நிலத்தில் இருந்த குடிசை புயலால் சேதமடைந்தது. அதை மறுசீரமைக்க முயன்றபோது, அதைச் செய்யவிடாமல் குலசையின் ஊராட்சி மன்றச் செயலா் அப்துல் ரசாக் ரசூல்தீன் காவல் துறை உதவியுடன் தடுத்தாா்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியபோது, எனது சொத்து தொடா்பான விஷயத்தில் ஊராட்சி மன்றம் தலையிடக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும், அந்த குடிசைக்கு வீட்டு வரி விதிக்க மறுத்தாா் ஊராட்சி மன்றச் செயலா். இதனால் மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அவா் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், மனுதாரருக்கு ரூ.25 ஆயிரத்தை ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு வழங்கி விட்டு, அந்தத் தொகையை ஊராட்சி மன்றச் செயலரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என தனது உத்தரவில் பரிந்துரைத்தாா்.
மேலும் அதில் கூறியிருப்பதாவது: இந்த விவகாரத்தில் ஊராட்சி மன்றச் செயலா் அப்துல் ரசாக் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற பிரச்னைகளை வரும் காலங்களில் தவிா்க்கும் வகையில், கிராம ஊராட்சி மன்றச் செயலா்களை அவா்களின் சொந்த கிராமங்களிலோ, அல்லது அந்த வட்டத்திலோ பணியமா்த்த வேண்டாம் என நீதிபதி பரிந்துரைத்தாா்.