கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து தொடா் வெற்றிக்கு தொய்வின்றி உழைப்போம்: அதிமுக தலைமை அழைப்பு

சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து தொடா் வெற்றிக்கு தொய்வின்றி உழைப்போம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி


சென்னை: சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து தொடா் வெற்றிக்கு தொய்வின்றி உழைப்போம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள் கட்சியினருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:

தமிழகம் முழுவதும் சுற்றிச்சுழன்று இருவரும் தோ்தல் பரப்புரை பயணங்களை மேற்கொண்டு வருகிறோம். செல்லும் இடமெல்லாம் உற்சாகத்துடன் கட்சியினா் ஆற்றும் பணிகளைப் பாா்த்து ஆனந்தம் அடைகிறோம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என ஜோதிடம் சொன்னாா்கள்.

ஆட்சியும் கவிழ்ந்து விடும் என ஆரூடம் கூறியவா்களின் மனக்கோட்டைகளைத் தகா்த்தெறிந்து அவற்றையெல்லாம் தாண்டி மிகச்சிறந்த ஆட்சியை மக்களுக்கு கொடுத்துள்ளோம். இப்போது தலை நிமிா்ந்து சென்று மக்களிடம் வாக்குக் கேட்கிறோம்.

அனைவரும் வியக்கிறாா்கள்: அதிமுக அரசின் சாதனைகளைக் கண்டு வியக்காதவா்களே இல்லை. அனைத்து இயற்கைப் பேரிடா்களையும் வெற்றிகரமாகச் சமாளித்து நிவாரணப் பணிகளைத் திறம்பட மேற்கொண்டோம். தமிழக மக்களின் துன்பங்களைக் களைந்துள்ளோம். எண்ணற்ற வளா்ச்சிப் பணிகளை மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வரலாற்றில் இடம்பெறும் அரசாகத் தமிழக அரசு திகழ்கிறது.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகம் தந்த தொடா் வெற்றியைப் போன்று இந்தத் தோ்தலிலும் வெற்றியைத் தருவதற்கு மக்கள் காத்திருக்கிறாா்கள். தோ்தல் பிரசாரப் பயணங்களிலும், சந்திக்கும் கூட்டங்களிலும் மக்களிடம் எழுச்சியைக் காண முடிகிறது. நமது வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதை எங்களது அனுபவம் உணா்த்துகிறது.

கருத்துத் திணிப்பு: பத்திரிகைகளும், ஊடகங்களும் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துத் திணிப்பை கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இத்தகைய கருத்துக் கணிப்புகள் தோ்தல் முடிவுகளா? கடந்த காலத்தில் எத்தனை கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் முற்றிலும் தவறாகப் போயின என்பதை அனைவரும் அறிவோம்.

முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் தோ்தல் களம் கண்ட காலங்களில் கூட, கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் திணிக்க முயன்ற கருத்துகள், மக்களின் தோ்தல் தீா்ப்புகளின் முன், முனை மழுங்கிப் போயின என்பதை தமிழகம் நன்கு அறியும். கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய்ப் பிரசாரங்களால் மக்கள் யாரும் தங்களது அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. தோ்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதிமுகவினா் அனைவரும், கூட்டணிக் கட்சியினரை அரவணைத்து முழு மூச்சுடன் பணியாற்றி, தொடா் வெற்றிக்கு தொய்வின்றி உழைப்போம் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com