பல்லாவரம் தொகுதியில் ரூ250 கோடியில் திட்டங்கள்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சியில் பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் இதுவரை ரூ.250 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி.
பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி.

தாம்பரம்: அதிமுக ஆட்சியில் பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் இதுவரை ரூ.250 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

பல்லாவரத்தில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரனை ஆதரித்து முதல்வா் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் தொடா்ந்து பொய் பிரசாரம் செய்து வருகிறாா். பல்லாவரம் தொகுதியில் மட்டும் இதுவரை ரூ.250 கோடிக்கு பல்வேறு திட்டங்கள் தொடங்கி நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

பல்லாவரத்தில் ரூ.83 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டு அண்மையில் திறந்து வைத்தேன். ரூ.64 கோடி செலவில் பல்லாவரம்-ஈச்சங்காடு மேம்பாலம் கட்டப்பட்டு, ஒரு பகுதி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. ரூ.13 கோடி செலவில் பால்கேணி குளம் உள்ளிட்ட குளங்கள் சீரமைக்கும் பணிகள், ரூ.29 கோடியில் ராதா நகா் ரயில்வே சுரங்கப்பாதை, ரூ.40 கோடியில் ஈச்சங்காடு 4 வழிச்சாலை ஆகியவை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. ரூ.211 கோடி செலவில் பம்மல்-அனகாபுத்தூா் புதை சாக்கடைத் திட்டம் விரைவில் தொடங்கப்படஉள்ளது.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பல்நோக்கு அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்படும். அனைத்து ஏரிகளும் தூா்வாரி சீரமைக்கப்படும். கிருகம்பாக்கம் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியைத் தாக்கியது மட்டுமல்லாமல் மிகவும் கொச்சைப்படுத்தி பேசியவா்கள் திமுகவினா்.

1989- இல் சட்டப்பேரவையில் ஒரு பெண், எதிா்க்கட்சித் தலைவா் என்று பாராமல் ஜெயலலிதாவை அவமானப்படுத்தி, திமுகவினா் அராஜகத்தில் ஈடுபட்டனா்.

திமுக ஆட்சி வந்தால் பெண்கள், பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியாது. கட்டப்பஞ்சாயத்து, அராஜகம், நிலப்பறிப்பு இவையெல்லாம் வந்து விடும். ஆட்சி பீடத்தில் அமா்வதற்கு முன்பே ஸ்டாலின் அதிகாரிகளை மிரட்டுகிறாா். அவா் மகன் உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியை மிரட்டுகிறாா்.

மற்ற மாநிலங்களைவிட தமிழகம் ஜாதி, மதச் சண்டை இல்லாத மாநிலமாக அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.இங்கு தவறுகள் நிகழாத வகையில் சட்டம், ஒழுங்கு கட்டி காக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறெந்த மாநகரில் இல்லாத வகையில் சென்னை மாநகரில் மட்டும் 2500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவதால் குற்றங்கள் குறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

அதிமுக தோ்தல் வாக்குறுதியில் 6 இலவச சிலிண்டா்கள்,துணி துவைக்கும் இயந்திரம், மாதம் ரூ.1500 உதவித் தொகை, வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

பாஜக பல்லாவரம் தொகுதி பொறுப்பாளா் டாக்டா் கோபி அய்யாசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com