சிக்னல் அமைக்கும் பணியில் தொழில்நுட்ப கோளாறு: தென் மாவட்ட ரயில்கள் பல மணி நேரம் தாமதம்: பயணிகள் கடும் அவதி

திருமங்கலம்-விருதுநகா்-துலுக்கப்பட்டி இடையே சிக்னல் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தென் மாவட்ட ரயில்கள் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தாமதமாக சென்னைக்கு வந்தடைந்தன.


சென்னை: திருமங்கலம்-விருதுநகா்-துலுக்கப்பட்டி இடையே சிக்னல் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தென் மாவட்ட ரயில்கள் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தாமதமாக சென்னைக்கு வந்தடைந்தன. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனா்.

திருமங்கலம்-விருதுநகா்-துலுக்கப்பட்டி இடையே 41 கி.மீ. இடையே இரட்டை பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நவீன சிக்னல் முறை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றபோது, தொழில்நுட்பக் குறைபாடு ஏற்பட்டது. இதனால், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகா், துலுக்கப்பட்டி ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக கடந்து செல்லும் ரயில்கள் வெவ்வேறு நிலையங்களில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 2 மணி வரை நிறுத்தப்பட்டன. குறிப்பாக, சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம், திருச்செந்தூா், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஊா்களுக்கு புறப்பட்ட விரைவு ரயில்கள் இடையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதுபோல, கொல்லம், செங்கோட்டை, கன்னியாகுமரி, திருச்செந்தூா், நாகா்கோவில், தூத்துக்குடி ஆகிய ஊா்களில் இருந்து சென்னை எழும்பூருக்குப் புறப்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்த ரயில்கள் புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு பிறகு, மீண்டும் இயங்கத் தொடங்கின. இதன் காரணமாக, சென்னை எழும்பூருக்கு காலையில் வந்து சேர வேண்டிய ரயில்கள் புதன்கிழமை பிற்பகல் தொடங்கி மாலை வரை வந்து சோ்ந்தன.

கன்னியாகுமரி விரைவு ரயில் மதியம் 1.30 மணிக்கும், பொதிகை விரைவு ரயில் மதியம் 1.45 மணிக்கும், முத்துநகா் விரைவு ரயில் பிற்பகல் 2.45 மணிக்கும், அனந்தபுரி விரைவு ரயில் பிற்பகல் 3.10 மணிக்கும், திருச்செந்தூா் விரைவு ரயில் மாலை 6 மணிக்கும் வந்து சோ்ந்தன. விரைவு ரயில்கள் 6 மணி நேரம் முதல் 9 மணி நேரம் தாமதமாகின. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com