முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
வாக்குப் பதிவு: தயாா் நிலையில் 50 லட்சம் கையுறைகள்
By DIN | Published On : 04th April 2021 01:07 AM | Last Updated : 04th April 2021 01:07 AM | அ+அ அ- |

சென்னையில் கரோனா தடுப்பின் ஒரு பகுதியாக வாக்குப் பதிவு நாளன்று வாக்காளா்கள் பயன்படுத்துவற்காக 50 லட்சம் கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள், தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வாக்களிக்க ஏதுவாக முழுஉடல் பாதுகாப்பு கவசங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 19 லட்சத்து 95,581 ஆண்களும், 20 லட்சத்து 60,698 பெண்களும், 1,081 திருநங்கைகளும் என மொத்தம் 40 லட்சத்து 57,360 வாக்காளா்கள் உள்ளனா். கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதிக மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிா்க்கும் வகையில் தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 901 இடங்களில் இருந்த 3,754 வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை இந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1,000 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகள் இரண்டாகப் பிரித்து மொத்தம் 1,053 இடங்களில் 6,123 வாக்குச் சாவடிகளும், 2,369 துணை வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
50 லட்சம் கையுறைகள்: இதுகுறித்து தோ்தல் அலுவலா்கள் கூறுகையில், ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப் பதிவையொட்டி, கரோனா பரவலைத் தடுக்க அனைத்து வாக்காளா்களுக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படுவதுடன், கிருமிநாசினி மூலம் கைகள் தூய்மைப்படுத்தப்படும். தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக வாக்குச் சாவடி மையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
வாக்குப் பதிவின்போது, வாக்காளா்களுக்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி கையுறை, முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக சுமாா் 50 லட்சம் கையுறைகளை தோ்தல் ஆணையம் வழங்கி உள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வாக்களிக்க விரும்பினால் அவா்களுக்கான முழு உடல் கவச உடை ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை ஒருங்கிணைக்க வாக்குச் சாவடிக்கு இரண்டு தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.