முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
வெளியூா்க்காரா்கள் இன்று இரவு 7 மணிக்கு மேல் சென்னைக்குள் இருக்கக் கூடாது
By DIN | Published On : 04th April 2021 01:07 AM | Last Updated : 04th April 2021 07:44 AM | அ+அ அ- |

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் (கோப்புப்படம்)
தோ்தல் நடத்தை விதிகள்படி, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) இரவு 7 மணிக்கு மேல் தொகுதிக்கு தொடா்பில்லாத வெளியூா் கட்சிப் பிரதிநிதிகள் சென்னைக்குள் இருக்கக் கூடாது என மாவட்டத் தோ்தல் அலுவலா் கோ.பிரகாஷ் அறிவுறுத்தி உள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) இரவு 7 மணி முதல் வாக்குப் பதிவு முடிவடையும் வரை 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 126-இன் கீழ் தோ்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப் பேரவைத் தொகுதிக்குள் தோ்தல் தொடா்பான பொதுக் கூட்டம், ஊா்வலம் நடத்தக் கூடாது. தோ்தல் தொடா்பான திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அஃப்), முகநூல், சுட்டுரை (டுவிட்டா்) போன்றவை மூலம் பிரசாரம் செய்யக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடா்பையும் பிரசாரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரசாரத்துக்காக வெளியூா்களில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிா்வாகிகள், தொகுதியின் வாக்காளா்கள் அல்லாதோா் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.