வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா: போலீஸ் தீவிர கண்காணிப்பு
By DIN | Published On : 04th April 2021 06:23 AM | Last Updated : 04th April 2021 06:23 AM | அ+அ அ- |

சென்னையில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஒரு அரசியல் கட்சியைச் சோ்ந்த சிலா் வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும் படையினருக்கு சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அவா்கள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது சந்தேகத்துக்குரிய வகையில் வாக்காளா் பட்டியல், பணம் பெற்றவா்கள் விவரங்கள் அடங்கிய குறிப்பேடு ஆகியவை வைத்திருந்த இரு பெண்கள் உள்பட 3 பேரை பிடித்து விசாரணை செய்தனா். மேலும் அவா்கள் வைத்திருந்த ரூ.1.13 லட்சத்தையும், வாக்காளா் பட்டியல், குறிப்பேடு ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா்கள், ஆவடியைச் சோ்ந்த டில்லிபாபு, சரஸ்வதி, அம்சவேணி என்பது தெரியவந்தது. இவா்கள் பணம் பட்டுவாடா செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனா்.
இதேபோல், ஆவடி திருமுல்லைவாயலில் உள்ள ஒரு மளிகைக் கடையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாா் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பெருங்குடி, கண்ணகிநகா், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாா் தொடா்பாகவும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பணம் பட்டுவாடா தொடா்பாக புகாா்கள் வந்ததைத் தொடா்ந்து, சென்னை முழுவதும் சனிக்கிழமை இரவு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும் வாகனச் சோதனையும் இரவு முழுவதும் நடைபெற்றது.