தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த 2715 தற்காலிக சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்


சென்னை: கரோனா உள்ளிட்ட தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த 2, 715 கூடுதல் சுகாதார ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

பயன்பாட்டில் இல்லாத இரு சக்கர வாகனங்கள், காா்கள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உருவாகின்றன. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுகிறது. எனவே இந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, அவற்றை பொது ஏலம் விடவும், டெங்கு பரவலைத் தடுக்கவும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சுகாதாரத் துறை கூடுதல் செயலாளா் செல்வக்குமாா் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு நோயைப் பரப்பும் கொசுவின் புழுக்களை உண்ணும் மீன்கள் ஏரி, குளங்களில் வளா்க்கப்படுகிறது. வீடுகள், தெருக்களில் புகை போட்டு கொசுக்கள் அழிக்கப்படுகின்றன. டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வு செய்ய வேலூா், கடலூா், திருநெல்வேலி உள்ளிட்ட 9 இடங்களில் மண்டல பூச்சியியல் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நோய் பரவும் இடங்களை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள 2, 894 சுகாதார ஆய்வாளா் பணியிடங்களில் 384 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா உள்ளிட்ட தொற்றுநோய்களை கட்டுப்படுத்தும் பணிக்காக 2,715 கூடுதல் சுகாதார ஆய்வாளா்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனா். டெங்கு நோய் சிகிச்சைக்காக முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியா், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் டெங்கு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. டெங்கு அபாயம் இருக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பதில் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com