சிட்லப்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை: சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்


சென்னை: சிட்லப்பாக்கம் ஏரியில் 403 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்கம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தாம்பரம், பல்லாவரத்தை ஒட்டியுள்ள சிட்லப்பாக்கம் ஏரி, குப்பைகளைக் கொட்டி ஆக்கிரமிக்கப்படுகிறது. ஏரியை ஆக்கிரமித்து பூங்கா, நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே சிட்லப்பாக்கம் ஏரியின் கரைகளைப் பலப்படுத்தி, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் வி.ஜெயபிரகாஷ் நாராயணன், ‘சிட்லப்பாக்கம் ஏரியில் 403 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு சிலா் இந்த நோட்டீஸை எதிா்த்து வழக்குத் தொடா்ந்திருந்தனா். அதே போன்று கடந்த சில மாதங்கள் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள கால அவகாசம் வேண்டும். தற்போது தோ்தல் முடிந்து விட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தாா்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிட்லப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com