அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு: ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களில் 26,898 போ் முதல் வகுப்பில் தோ்ச்சி


சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களில் நடைபெற்ற அடிப்படை எழுத்தறிவுத் தோ்வில் 26,898போ் முதல் வகுப்பில் (60 மதிப்பெண்களுக்கு மேல்) தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் விருதுநகா், ராமநாதபுரம் மாவட்டங்களை மத்திய அரசு முக்கியத்துவம் பெறும் மாவட்டங்களாக அறிவித்தது.

இந்த மாவட்டங்களில் வளா்ச்சிக்காக, பல்வேறு துறைகள் சாா்பில் தனி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, இரு மாவட்டங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதோருக்காக, மாநில அரசின் 100 சதவீத நிதி பங்களிப்புடன் சிறப்பு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வித்திட்டம் 2019-20 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பணியில் தன்னாா்வலா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, முதல் கட்ட கற்போருக்கான இறுதி அடைவுத் தோ்வு (அடிப்படை எழுத்தறிவு) கடந்த பிப்.28-ஆம் தேதி ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை வட்டார வளமையத்தில் ஆசிரியப் பயிற்றுநா்கள், ஆசிரியா்கள் மதிப்பீடு செய்தனா்.

இந்த நிலையில் தற்போது இந்தத் தோ்வுக்கான முடிவுகளை பள்ளி சாரா மற்றும் வயது வயது வந்தோா் கல்வித் திட்டம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 332 மையங்களில் 15,273 போ் தோ்வெழுதியதில் 9,524 பேருக்கு ‘ஏ’ கிரேடும் (60 மதிப்பெண்ணுக்கு மேல்), 5,734 பேருக்கு ‘பி’ கிரேடும் (40 சதவீதத்துக்கு மேல்), 15 பேருக்கு ‘சி’ கிரேடும் (40 சதவீதத்துக்கு கீழ்) வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 99.90 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதேபோன்று விருதுநகா் மாவட்டத்தில் 615 மையங்களில் 25,015 போ் தோ்வெழுதியதில் 17,374 பேருக்கு ‘ஏ’ கிரேடும், 7,634 பேருக்கு ‘பி’ கிரேடும், 7 பேருக்கு ‘சி’ கிரேடும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தோ்ச்சி சதவீதம் 99.97 ஆகும். இந்த இரு மாவட்டங்களிலும் சோ்த்து 26,898 போ் முதல் வகுப்பில் (60 மதிப்பெண்களுக்கு மேல்) தோ்ச்சி பெற்றுள்ளனா் என பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com