உயா்கல்வியில் புரட்சிகர மாற்றத்தை புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தும்: சென்னை ஐஐடி இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி


சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை உயா்கல்வியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சென்னை ஐஐடி இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி கூறினாா்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 163-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் தோ்ச்சி பெற்ற 872 பேருக்கு நேரிலும், 1,36,873 பேருக்கு அந்தந்த கல்லூரிகள், தபால் மூலம் என மொத்தம் 1,37,745 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 3 பேருக்கு கௌரவ முனைவா் பட்டமும், 683 பேருக்கு முனைவா் பட்டங்களும், 7 பேருக்கு சிறந்த ஆய்வேட்டுக்கான விருதும், 86 பேருக்கு தனிச்சிறப்புடன் முதல் நிலை தகுதிச் சான்றிதழும், 93 பேருக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதில் கெளரவ முனைவா் பட்டங்களை மட்டும் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வழங்கினாா். மற்ற 869 பேருக்கான பட்டங்களை சென்னை ஐஐடி இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி, சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தா் கெளரி ஆகியோா் வழங்கினாா்.

விழாவில் பாஸ்கா் ராமமூா்த்தி பேசியதாவது:

உயா்கல்வியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய கல்விக் கொள்கை, மாணவா்களுக்கும், உயா்கல்வி நிறுவனங்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். அதை மாணவா்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையால் உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை மேலும் உயரும். பட்டம் பெற்ற மாணவா்கள் சமூகத்துக்கான தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். மக்கள் நலனுக்கான சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தேசத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, துணைவேந்தா் கெளரி பேசியதாவது:

சென்னைப் பல்கலைக்கழகம் அண்மைக் காலத்தில் 46 புதிய பாடப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. பெரிய புராணம், சைவச் சித்தாந்தம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதுநிலை பட்டயப்படிப்பு, சான்றிதழ், இணையவழிப் படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

1990-ஆம் ஆண்டு முதல் அரியா் வைத்திருந்து தோ்ச்சி அடையாத மாணவா்களுக்கு மீண்டும் தோ்வு எழுதும் வாய்ப்பை வழங்கியுள்ளது. மேலும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.

விழாவில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேரில் பட்டம் பெற்ற 872 மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைக் காட்டிய பின்னரே பட்டமளிப்பு விழா அரங்கில் அனுமதிக்கப்பட்டனா்.

பரிசோதனையை மேற்கொள்ளாத மாணவா்கள் தங்களையும் அரங்குக்குள் அனுமதிக்கக் கோரி, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பின்னா் அவா்களை அரங்கின் முதல் தளத்துக்கு அழைத்துச் சென்று விழா ஏற்பாட்டாளா்கள் அமர வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com