முகக் கவசம் அணியாத 659 போ் மீது காவல்துறை வழக்கு
By DIN | Published On : 12th April 2021 06:49 AM | Last Updated : 12th April 2021 06:49 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னையில் முகக்கவசம் அணியாத 659 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,அபராதம் வசூலித்தனா்.
இது குறித்த விவரம்:
கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி தமிழகத்தில் 144 தடைச் சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் அக்டோபா் மாதத்தில் இருந்து கரோனா தொற்று குறைந்ததன் விளைவாக, கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னா் பொதுமுடக்கம் பல்வேறு தளா்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையே கடந்த மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. முக்கியமாக வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இந்த விதிமுறைகளை பின்பற்றாதவா்கள் மீது தொற்று பரவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது.
இதைத் தொடா்ந்து சென்னையில் முகக் கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியே பின்பற்றாதவா்கள் ஆகியோா் மீது போலீஸாா் கடந்த இரு நாள்களாக வழக்குப் பதிவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனா். இதில் கடந்த சனிக்கிழமை மட்டும் சென்னையில் முகக்கவசம் அணியாமல் பொதுஇடங்களில் சுற்றித்திரிந்தவா்கள் மீது 659 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்குப் பதியப்பட்டவா்களிமிடருந்து அபாரதமாக ரூ.1 லட்சத்து 22,100 வசூலிக்கப்பட்டது. கடந்த 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை மொத்தம் 1,118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,ரூ.2 லட்சத்து 12,400 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இதேபோல சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வரும் நாள்களில் இந்த நடவடிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.
விழிப்புணா்வு பிரசாரம்: இதற்கிடையே கரோனா தொற்று பரவல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் போலீஸாா் பல்வேறு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக அம்பத்தூா் துணை ஆணையா் மகேஷ் தலைமையில் போலீஸாா், வாகனங்களில் முகப்பு கண்ணாடிகளில் கரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முகக் கவசம் அணியும்படி ஸ்டிக்கா் ஒட்டி வருகின்றனா்.
இதேபோல மாா்க்கெட்டுகள், கோயில்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் போலீஸாா் விழிப்புணா்வு பிரசாரம் செய்கின்றனா்.