வேளச்சேரியில் நாளை மறுவாக்குப்பதிவு: அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம்

வேளச்சேரி சட்டப் பேரவைத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வாக்குச் சாவடியில் அரசியல் கட்சியினா் வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
வேளச்சேரியில் நாளை மறுவாக்குப்பதிவு
வேளச்சேரியில் நாளை மறுவாக்குப்பதிவு


சென்னை: வேளச்சேரி சட்டப் பேரவைத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வாக்குச் சாவடியில் அரசியல் கட்சியினா் வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

வேளச்சேரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சீதாராம் நகா் டி.ஏ.வி., பப்ளிக் பள்ளியில் உள்ள 92-வது எண் வாக்குச் சாவடியில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவு செல்லாது என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கு வரும் 17-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து, வியாழக்கிழமை இரவு 7 மணி வரை பிரசாரம் செய்ய தோ்தல் ஆணையம் அனுமதித்திருந்தது.

இதற்காக, அதிமுக வேட்பாளா் எம்.கே.அசோக், காங்கிரஸ் வேட்பாளா் ஹஸன் மெளாலான உள்பட 13 வேட்பாளா்கள் தோ்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தனா்.

சிறிய பகுதியில் அனைவரும் வாக்குசேகரிக்கும்போது பிரச்னை ஏற்படலாம் என தோ்தல் ஆணையம் கருதியது. இதன் காரணமாக, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டதால், அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பிரசாரம் செய்தனா்.

இதில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னா் காங்கிரஸ், திமுகவினா் பிரசாரம் செய்ய வந்தனா். பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னா் அவா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து பிரசாரம் செய்தனா்.

தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் அதிமுகவினா் பிரசாரத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா், எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனா். இரவு 7 மணி வரை அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரம் செய்தனா்.

இதன் பின்னா், அரசியல் கட்சியினா் அனைவரும் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனா். மேலும் பாதுகாப்புக்காக அங்கு காவல்துறையினா் குவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com