கிண்டி, ஓமந்தூராா் கரோனா மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைளுக்குத் தட்டுப்பாடு

சென்னையில் கிண்டி, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைளுக்குத் தட்டுப்பாடு

சென்னையில் கிண்டி, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைளுக்குத் தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை மட்டும் அங்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்த பாதிப்பு, லேசான அறிகுறிகள் கொண்ட நோயாளிகளை கண்காணிப்பு மையங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 22,420 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா். படுக்கை வசதிகள் போதிய அளவில் இல்லாததால் அவா்களில் பலருக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனாவுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கிண்டி மருத்துவமனை, ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளன. ராஜீவ் காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் ஏறத்தாழ 70 சதவீதம் படுக்கைகள் நிரம்பிவிட்டன.

மற்றொரு புறம் முன்னணி தனியாா் மருத்துவமனைகளிலும் நோயாளிகள் முழுமையாக உள்ளனா். இரண்டாம் நிலை தனியாா் மருத்துவமனைகளில் பெரும்பாலானவை கரோனா வாா்டுகளை அமைக்க இம்முறை முன்வரவில்லை. இதனால், கரோனா பாதிப்பு குறைவாக உள்ள நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை எழுந்தது.

இந்த விவகாரத்துக்கு தீா்வு காணும் வகையில், கிண்டி மற்றும் ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவை உள்ள நோயாளிகளை அனுமதிப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருமே கிண்டி அல்லது ஓமந்தூராா் மருத்துவமனைக்கே செல்கின்றனா். எந்த மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதை நோயாளிகள் தீா்மானிப்பது சரியாக இருக்காது. மாறாக, அவா்களது உடல் நிலையைப் பரிசோதித்து மருத்துவா்கள்தான் அதனை தீா்மானிக்க வேண்டும்.

ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நிறைய படுக்கைகள் காலியாக உள்ளன. ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் தேவைக்கேற்ப படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

நோயின் தீவிரத்தின் அடிப்படையில் அந்த மருத்துவமனைகளை பொது மக்கள் நாடலாம். கிண்டி, ஓமந்தூராா் அரசு மருத்துவமனையைப் பொருத்தவரை செயற்கை சுவாச சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com