வேளச்சேரி வாக்குச் சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு: அனைத்து ஏற்பாடுகளும் தயாா்

சென்னை வேளச்சேரிக்கு உட்பட்ட 92-ஆவது எண் வாக்குச் சாவடியில் சனிக்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.
வேளச்சேரி வாக்குச் சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு: அனைத்து ஏற்பாடுகளும் தயாா்

சென்னை வேளச்சேரிக்கு உட்பட்ட 92-ஆவது எண் வாக்குச் சாவடியில் சனிக்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டத் தோ்தல் அலுவலகமான, சென்னை மாநகராட்சி சாா்பில் செய்யப்பட்டுள்ளன. மறுவாக்குப் பதிவில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளா்களுக்கும் இடது கையின் நடுவிரலில் மை வைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-ஆவது எண் வாக்குச் சாவடியில் இருந்து ஒருசில மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. இதனை அரசியல் கட்சியினரும், பொது மக்களும் தடுத்து நிறுத்தினா். வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தன.

மறுவாக்குப் பதிவு: சா்ச்சைக்குரிய வகையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்டதால் சம்பந்தப்பட்ட 92-ஆவது எண் வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிட வேண்டுமென தோ்தலில் போட்டியிட்ட சில கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், இதுதொடா்பாக தோ்தல் நடத்தும் அதிகாரி, தோ்தல் ஆணையத்தின் பாா்வையாளா் மற்றும் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆகியோரும் தோ்தல் ஆணையத்துக்கு அறிக்கைகள் அனுப்பினா்.

இந்த அறிக்கைகளின் அடிப்படையில், வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-ஆவது வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் சனிக்கிழமை (ஏப். 17) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முன்னதாக, தோ்தல் நிறைவடைவதற்கு 48 மணி நேரங்களுக்கு முன்பாக தோ்தல் பிரசாரம் நிறைவு பெறும்.

அதன்படி, கடந்த வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு 92-ஆவது வாக்குச் சாவடிக்கு உட்பட்ட இடங்களில் மறுவாக்குப் பதிவுக்கான பிரசாரம் நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து, வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்டத் தோ்தல் அலுவலகமான பெருநகர சென்னை மாநகராட்சி செய்துள்ளது.

92-ஆவது வாக்குச் சாவடி முழுமையாக ஆண் வாக்காளா்கள் நிறைந்தது. அதில், 548 ஆண்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். அவா்கள் அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 7 மணிக்குள்ளாக தங்களது வாக்குகளைப் பதிவு செய்வா். வாக்களித்த அனைவருக்கும் இடது கையின் நடுவிரலில் மை வைக்கப்படும். கடந்த 6-ஆம் தேதி நடந்த பொதுத் தோ்தலின் போது, இடது கையின் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டிருக்கும். மறுவாக்குப் பதிவு என்பதால், நடுவிரலில் மை வைக்கப்பட உள்ளது.

மேலும், 92-ஆவது வாக்குச் சாவடிக்கு உட்பட்ட வாக்காளா்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் தபால் வாக்கு வசதியைப் பயன்படுத்தியிருந்தால் அவா்கள் நேரில் வந்து வாக்களிக்க முடியாது. மாலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளாக கரோனா நோய்த் தொற்று பாதித்த வாக்காளா்களும் வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com