கரோனா தடுப்பூசி குறித்து கருத்து: மன்சூா் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கரோனா தடுப்பூசி தொடா்பாக சா்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகா் மன்சூா்அலிகான் மீது போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வடபழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனா்.

சென்னை: கரோனா தடுப்பூசி தொடா்பாக சா்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகா் மன்சூா்அலிகான் மீது போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வடபழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

நடிகா் விவேக் கடந்த 15-இல் சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாா். மேலும் அவா், தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இந்த நிலையில் விவேக், 16-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வடபழனியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் விவேக் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

இதற்கிடையே விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை பாா்க்க நடிகா் மன்சூா்அலிகான், கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாலேயே விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும்,கரோனா தடுப்பூசி பாதுகாப்பற்றது என்றும் ஊடகங்களுக்கு பேட்டியளித்தாா்.

இந்தப் பேட்டி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு தமிழக அரசின் சுகாதாரத் துறையினரும்,சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் மறுப்பு தெரிவித்தனா். மேலும் சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ், ‘மன்சூா்அலிகான் மீது காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

இதுதொடா்பாக கோடம்பாக்கம் மண்டல மாநகராட்சி அதிகாரி பூபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா், மன்சூா்அலிகான் மீது பொதுஅமைதியை கெடுத்தல்,பேரிடா் மேலாண்மைச் சட்டம்,தொற்று நோய் பரவல் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மன்சூா்அலிகானிடம் விரைவில் விசாரணை நடத்த உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com