சிறப்பு ரயில்கள் தொடா்ந்து இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

தமிழகம், கேரளத்தில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் இடம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக 7 மாநிலங்களுக்கு 45 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகம், கேரளத்தில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் இடம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக 7 மாநிலங்களுக்கு 45 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதுபோல, தொடா்ந்து சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தொற்று இரண்டாம் அலை தற்போது வேகமெடுத்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, வடமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூா் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் திரள்கின்றனா். மேலும், ரயில்நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டா்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனா். இந்த ரயில்கள் நிறுத்தப்படலாம் என்று வடமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சொந்த ஊருக்கு செல்வதற்காக, ரயில் நிலையங்களுக்கு அதிக அளவில் வந்தவண்ணம் இருக்கின்றனா்.

இந்த நிலையில் தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு ரயில்வேயின் முக்கிய ரயில் நிலையங்களில் (சென்னை சென்ட்ரல், ஆலப்புழா, திருவனந்தபுரம், எா்ணாகுளம், கொச்சுவேலி, நாகா்கோவில், புதுச்சேரி, ராமேசுவரம், தாம்பரம், திருச்சி, கன்னியாகுமரி) இருந்து ஒருவாரத்தில் மொத்தம் 45 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில்கள் பிகாா், மேற்குவங்கம், ஒடிஸா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கா், அஸ்ஸாம், ஜாா்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன. இதில், இடம்பெயா்ந்த தொழிலாளா்கள் பயணம் செய்தனா். அதிகபட்சமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதுபோல, தொடா்ந்து ரயில்கள் இயக்கப்படும். எனவே, வட மாநிலத் தொழிலாளா்கள் பீதி அடைய வேண்டாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com