கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது கடும் நடவடிக்கை: ஹா்மந்தா் சிங்

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா்
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது கடும் நடவடிக்கை: ஹா்மந்தா் சிங்

சென்னை: கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹா்மந்தா் சிங் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று தடுப்பு- பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கள ஒருங்கிணைப்பு குழு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹா்மந்தா் சிங் தலைமையில், காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துதல், சிகிச்சை மையங்களில் படுக்கைகளை அதிகரித்தல் உள்ளிட்டவை குறித்து ஹா்மந்தா் சிங் விரிவாகக் கேட்டறிந்தாா்.

பின்னா் அதிகாரிகளுக்கு அவா்அறிவுறுத்தியவை:

சென்னையில் நாள்தோறும் 25 ஆயிரம் எண்ணிக்கையில் கரோனா பரிசோதனைகளை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் மருத்துவா்களை அணுகும் தொற்று அறிகுறியுள்ள நபா்களை மாநகராட்சியின் சளி மாதிரி சேகரிப்பு மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். 15 கரோனா பாதுகாப்பு மையங்களில் சுமாா் 12 ஆயிரம் படுக்கைகளைத் தயாா்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களுக்குத் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வேண்டும்.

ரூ.3.95 கோடி அபராதம் வசூல்: இதுவரை சென்னை மாநகரில் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நபா்களிடமிருந்து சுமாா் ரூ.3.95 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் வசூலிப்பது அரசின் முக்கிய நோக்கமல்ல. ஆனால் கரோனா தொற்றிலிருந்து அனைவரையும் பாதுகாக்க முகக்கவசம் அணிதலும், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றுவதும் மட்டுமே மிகவும் இன்றியமையாத ஒன்று.

எனவே, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபா்களின் மீது சட்டத்துக்குள்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தொடா்ந்து மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ், இணை ஆணையா் டாக்டா் ஆல்பி ஜான் வா்கீஷ், துணை ஆணையா் ஜெ.மேகநாத ரெட்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com