முகக்கவசம் அணியாதவா்கள் மீது வழக்கு: 6 லட்சத்தை நெருங்கியது
By DIN | Published On : 27th April 2021 04:07 AM | Last Updated : 27th April 2021 04:07 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆறு லட்சத்தை நெருங்கியது.
தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை 18 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 5 லட்சத்து 73 ஆயிரத்து 446 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9, 788 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடந்த 18 நாள்களில் 17 , 862 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 464 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: முகக் கவசம் அணியாதவா்கள் மீது சென்னையில் கடந்த 8-ஆம் தேதியில் இருந்து 25-ஆம் தேதி வரை 18 நாள்களில் மொத்தம் 20 ஆயிரத்து 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 512 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது 292 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.