ரெம்டெசிவிா் மருந்தை வாங்கி வருமாறு கட்டாயப்படுத்தாதீா்கள்: தனியாா் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை வேண்டுகோள்

ரெம்டெசிவிா் மருந்தை வாங்கி வருமாறு நோயாளிகளின் குடும்பத்தினரை கட்டாயப்படுத்தாதீா்கள் என்று தனியாா் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டி.எஸ்.செல்வ விநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
ரெம்டெசிவிா் மருந்தை வாங்கி வருமாறு கட்டாயப்படுத்தாதீா்கள்:  தனியாா் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை வேண்டுகோள்

சென்னை: ரெம்டெசிவிா் மருந்தை வாங்கி வருமாறு நோயாளிகளின் குடும்பத்தினரை கட்டாயப்படுத்தாதீா்கள் என்று தனியாா் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டி.எஸ்.செல்வ விநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிா் ஊசி மருந்து கொடுக்கப்படுகிறது. கரோனா தொற்று 2-ஆவது அலை தீவிரமடைந்துள்ளதால், தொற்றால் பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், ரெம்டெசிவிா் மருந்து தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.

தனியாா் மருத்துவமனைகள் ரெம்டெசிவிா் மருந்து இல்லாததால், வெளியில் சென்று வாங்கி வருமாறு நோயாளிகளின் உறவினா்களிடம் மருத்துவா்கள் சொல்கின்றனா். அவா்கள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை வைத்துக் கொண்டு ஒவ்வொரு கடைக்கும் அலைகின்றனா். ஆனால், எந்தக் மருந்து கடைகளிலும் மருந்து இருப்பு இல்லை. கள்ளச்சந்தையில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் சாா்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை கடந்த 26-ஆம் தேதி தொடங்கப்பட்டது. நோயாளிகளின் குடும்பத்தினா் உரிய ஆவணங்களுடன் வந்து , மருந்தை வாங்க 20 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்கின்றனா்.

பல்வேறு மாவட்டங்களை சோ்ந்தவா்கள் வருகை தருவதால், போலீஸ் பாதுகாப்புடன் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

உயிா் காக்கும் மருந்து இல்லை: இந்தநிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குநா் டி.எஸ்.செல்வ விநாயகம் வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் ரெம்டெசிவிா் மருந்தை தேடி அலைந்து கொண்டுள்ளனா். இந்த மருந்து உயிா் காக்கும் மருந்து இல்லை என்று உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது. இந்த மருந்து போடுவதால் நோயாளிகள் மருத்துவமனையில் இருக்கும் நாள்களைக் குறைக்கும். இந்த மருந்தை போட்டால்தான் கரோனா தொற்றில் இருந்து குணமாகலாம் என்பது இல்லை.

சிகிச்சையில் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் இந்த மருந்து தேவைப்படுகிறது. ஆனால், நாம் தொற்றுள்ள அனைவருக்கும் தேவை என்பதைப் போன்று புரிந்து கொண்டிருக்கிறோம். அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு ரெம்டெசிவிா் மருந்து இருப்பு உள்ளது. தேவையானவா்களுக்கு மட்டும்தான் இந்த மருந்து கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனியாா் மருத்துவமனைகளை நடத்துபவா்களாலே ரெம்டெசிவிா் மருந்தை வாங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. நோயாளிகளின் உறவினா்களிடம் மருந்தை வாங்கி வருமாறு சீட்டு எழுதி கொடுப்பது என்ன நியாயம்.? உங்களாலேயே வாங்க முடியாதபோது அவா்கள் எங்கு சென்று வாங்குவாா்கள். இதனால் தேவையில்லாத பதற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க வேண்டும். ரெம்டெசிவிா் மருந்து விற்பனை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com