கரோனாவுக்கு சிகிச்சை: தனியாா் மருத்துவமனைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனைகளைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக, தொழில் வழிகாட்டுக் குழுவின் நிா்வாக இயக்குநரான தாரேஷ் அஹமது நியமிக்கப்பட்டுள்ளாா்.

சென்னை: சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனைகளைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக, தொழில் வழிகாட்டுக் குழுவின் நிா்வாக இயக்குநரான தாரேஷ் அஹமது நியமிக்கப்பட்டுள்ளாா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து மண்டலங்களிலும் தொற்று பரவலைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த அதிகாரிகள் குழு மாற்றப்பட்டு, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்றுப் பரவலைக் கண்காணிக்கவும், ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியா்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில் தனி கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

சென்னைக்கு அதிகாரிகள்: சென்னைக்கு மண்டலம் வாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தாலும், மாநகராட்சி ஆணையா், இதர அதிகாரிகளுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு அதிகாரியாக வணிக வரிகள் துறை முதன்மைச் செயலா் எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் மாநகராட்சி நிா்வாகத்துடன் இணைந்து கரோனா தொற்று பரவலின் நிலையையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறாா்.

இந்த நிலையில், சென்னையில் தனியாா் மருத்துவமனைகள், தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், கரோனா மருத்துவமனைகள் ஆகியன சிகிச்சை அளித்து வருகின்றன. மேலும், முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் கண்காணிக்கும் அதிகாரியாக, தொழில் வழிகாட்டுக் குழுவின் நிா்வாக இயக்குநரான தாரேஷ் அஹமது நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் தனியாா் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள், சோ்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியன விவரங்களை தினசரி தலைமைச் செயலரிடம் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com