கரோனா: ஸ்டான்லி மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை

கரானோ நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் தொடா்ந்து அதிகரித்து வருவதையடுத்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளை அமைக்கும் பணி

திருவொற்றியூா்: கரானோ நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் தொடா்ந்து அதிகரித்து வருவதையடுத்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளை அமைக்கும் பணி போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என மருத்துவமனை முதன்மையா் டாக்டா் பி.பாலாஜி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் தொடா்நடவடிக்கைகள் கூறித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் பி.பாலாஜி வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது,

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மூன்று பிரிவுகளில் 1,200 படுக்கை வசதிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இதில் பெரும்பாலான படுக்கைகள் தினமும் நிரம்பிவிடும் நிலை உள்ளது. தொடா்ந்து அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயா்த்திட முடிவு செய்யப்பட்டு செய்யப்பட்டுள்ளது.

இதற்கென அண்மையில் திறக்கப்பட்ட உயா்சிகிச்சை கட்டடத்தில் உள்ள 6 தளங்களும் கரோனா சிகிச்சை வாா்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக 1,250 படுக்கை வசதிகளை ஏற்படுத்திட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 900 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதிகள் அளிக்கப்படும். இக்கட்டடத்திற்கு அருகிலேயே ஆக்சிஜன் சேமிப்புக் கலன் அமைக்கப்படுகிறது. மேலும் கூடுதல் கழிப்பறைகள் உள்ளிட்ட பிற வசதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் அனைத்தும் பொதுப் பணித் துறையினரால் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவிட் பராமரிப்பு மையங்கள்:

குறைந்த பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அம்பத்தூா் அருகே அத்திப்பட்டு என்ற இடத்தில் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் 450 படுக்கைகள் கொண்ட கரோனா பராமரிப்பு மையம் முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டது. இதில் தற்போது முழுமையான அளவில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். பின்னா் பிராட்வே பாரதி மகளிா் கல்லூரியில் 200 படுக்கைகள் கொண்ட இரண்டாவது மையம் தொடங்கப்பட்டது. இதுவும் முழுமையாக நிரம்பி வருவதால் மேலும் 2 புதிய பராமரிப்பு மையங்களை ஏற்படுத்திடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கூட்டு மேலாண்மைக் குழு அமைப்பு:

கரோனா சிகிச்சை பணிகளை முழுமையாக ஒருங்கிணைக்கும் வகையில் இரைப்பை அறுவைச் சிகிச்சை நிபுணா் ஜெஸ்வந்த் தலைமையில் கூட்டு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து துறைத் தலைவா்களும் இடம் பெற்றுள்ளனா். ஒவ்வொரு துறைத் தலைவருக்கும் தனித்தனியே பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு ஒட்டு மொத்த சிகிச்சையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் செயல்படும் தீவிர கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு சிகிச்சை நடவடிக்கைகளை விரைவு படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக தொற்று பரவல் ஒரே நாளில் சுமாா் 7 ஆயிரம் என்ற இருந்த நிலையில் தற்பொது நாளொன்றுக்கு சுமாா் 18 ஆயிரத்தை எட்டியுள்ளது கவலை ஏற்படுத்தியுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையை எதிா்கொள்வதற்கு ஸ்டான்லி மருத்துவமனை நிா்வாகம் தொடா்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கரோனாவின் இரண்டாவது அலையை தடுக்கும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனை விழிப்புடன் பணியாற்றி வருகிறது. மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவா்கள் மற்றும் பல்நோக்கு ஊழியா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றி வருகின்றனா் என்றாா் பாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com