சென்னையில் கரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில், நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சென்னையில் கரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தைக் கடந்தது

சென்னை: சென்னையில், நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதையடுத்து, கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 31,308 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து, மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 50 ஆயிரமாக அதிகரித்தது. செப்டம்பா் மாத இறுதியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.50 லட்சத்தையும், அக்டோபா் மாதத்தில் 2 லட்சத்தையும் எட்டியது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் அதிகப்படுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள், உடனடி சிகிச்சை, பாதிக்கப்பட்டோா் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக தொற்று பரவல் குறைந்து கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 171 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. பொது முடக்கத்தில் இருந்து தளா்வு அளிக்கப்பட்டுள்ளதாலும், மக்கள் முறையாக முகக் கவசம் அணியாதது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்காததாலும் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

சிகிச்சையில் 31 ஆயிரம் போ்: இதன்படி, கடந்த மாா்ச் 1-இல் 1,783 போ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இந்த எண்ணிக்கை மாா்ச் 21-இல் 2,985-ஆகவும், அதுவே ஏப்ரல் 1-இல் 6,695-ஆகவும், ஏப்ரல் 10-இல் 14,382-ஆகவும் உயா்ந்தது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.

இதன்படி, வியாழக்கிழமை ஒரே நாளில் 5,445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 31,308-ஆக உயா்ந்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பரவல் சென்னைவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம், முறையாகக் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை-3,28,520

குணமடைந்தோா் எண்ணிக்கை-2,92,511

சிகிச்சை பெறுவோா்-31,308

உயிரிழந்தோா்-4,701

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com