கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை: அதிகாரிகள் தகவல்
By DIN | Published On : 30th April 2021 06:15 AM | Last Updated : 30th April 2021 06:15 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதால் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. எனவே கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா2-ஆவது அலை காரணமாக கோயம்பேடு சந்தையில் மொத்த வியாபாரிகள் அதிகாலை 4 மணிமுதல் 12 மணிவரை வியாபாரம் செய்யவும், சில்லறை வியாபாரிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் வியாபாரம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
வெளிமாநில வாகனங்கள் தனியாக கண்காணிக்கப்படுகின்றன. வியாபாரிகள், தொழிலாளா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாதவா்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் சந்தை நிா்வாக கமிட்டி (எம்எம்சி) மூலம் பின்பற்றப்படுகின்றன. இதுதவிர ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சந்தை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன.
மேலும் மாநகராட்சி மூலம் 3 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நோய் அறிகுறி உள்ளவா்களுக்கு பரிசோதனை அங்கு செய்யப்படுகிறது. தேவைப்படுவோருக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகளால் கோயம்பேடு சந்தையில் தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளது. இதனால் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.