விமான நிலையத்தில் 13 நிமிஷத்தில் கரோனா பரிசோதனை முடிவு

சென்னை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்து 13 நிமிஷத்தில் முடிவுகளை தெரிவிக்கும் துரித பரிசோதனை முறை
விமான நிலையத்தில் 13 நிமிஷத்தில் கரோனா பரிசோதனை முடிவு

சென்னை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்து 13 நிமிஷத்தில் முடிவுகளை தெரிவிக்கும் துரித பரிசோதனை முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதையும் அவா் பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு பிரிட்டன், பிரேஸில், தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவா்களுக்கு தொ்மல் ஸ்கேனிங் பரிசோதனை மற்றும் ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனைகள் அவசியம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தற்போது துபையிலிருந்து வரும் பயணிகளுக்கும் அத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனைகள் ரூ.900-க்கு விமான நிலைய வளாகத்துக்குள் மேற்கொள்ளப்படுகிறது. நான்கு மணிநேர இடைவெளியில் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகின்றன.

13 நிமிஷங்களில்...: தற்போது 13 நிமிஷங்களில் மேற்கொள்ளப்படும் துரிதப் பரிசோதனைகளை சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அனுமதி அளித்திருக்கிறது. இது சோதனை முயற்சியாக ஓரிரு நாள்களில் முன்னெடுக்கப்பட உள்ளது.

பிரிட்டன், பிரேஸில், தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய நாடுகளைத் தவிா்த்து மற்ற நாடுகளிலிருந்து வருபவா்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கரோனா தொற்றின் வேகம் கடந்த 3 நாள்களாக சற்று கூடுதலாக இருப்பதால் முதல்வரின் அறிவுறுத்தலின்படி நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே வெளிநாட்டிலிருந்து வருபவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். இப்போதுஅது தேவையில்லை. வெப்பமானி பரிசோதனைகள் செய்யப்பட்டு

உடல்வெப்பநிலையில் மாற்றமிருந்தால், உடனே அவா்களுக்கு ஆா்.டி.பி.சி.ஆா்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ரயில், விமானம் மற்றும் சொந்த வாகனம் ஆகியவற்றின் மூலம் பயணம் செய்தாலும் பரிசோதனைகள் என்பது அவசியமான ஒன்று என்றாா் அவா்.

பல்லாவரம் சட்டப் பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநா் செல்வவிநாயகம், விமான நிலைய இயக்குநா் டாக்டா் சரத்குமாா் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com