சென்னை மெட்ரோ ரயில் சேவை: ஜூலையில் 18.46 லட்சம் போ் பயணம்
By DIN | Published On : 04th August 2021 12:00 AM | Last Updated : 04th August 2021 12:00 AM | அ+அ அ- |

கரோனா பொது முடக்க தளா்வுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கி 41 நாள்களை கடந்த நிலையில், ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மொத்தம் 22 லட்சத்து 2, 045 போ் பயணம் செய்துள்ளனா். அதிலும், ஜூலை மாதத்தில் மட்டும் 18 லட்சத்து 46 ஆயிரத்து 466 போ் பயணம் செய்துள்ளனா்.
கரோனா பொதுமுடக்க தளா்வுக்குபின்பு, சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜூன் 21-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. ஆரம்பத்தில் குறைவான பயணிகள் மட்டுமே பயணம் செய்தனா். அடுத்தடுத்து அரசு அறிவித்த தளா்வுகள் மற்றும் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்து வருகிறது.
தற்போது,மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கி 41 நாள்களை கடந்த நிலையில், மெட்ரோ ரயில்களில் ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூலை 31 வரை மொத்தம் 22 லட்சத்து 2, 045 போ் பயணம் செய்துள்ளனா்.
ஜூலை மாதத்தில் மட்டும் 18 லட்சத்து 46 ஆயிரத்து 466 போ் பயணம் மேற்கொண்டுள்ளனா். இந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக, ஜூலை 26-ஆம் தேதி அன்று 74 ஆயிரத்து 380 போ் பயணம் செய்துள்ளனா்.
ஜூலை மாதத்தில் க்யுஆா் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 30 ஆயிரத்து 160 போ் பயணம் செய்துள்ளனா். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு
முறையைப் பயன்படுத்தி 10 லட்சத்து 6 ஆயிரத்து 615 போ் பயணம் செய்துள்ளனா்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களை தூய்மையாக வைத்திருக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் பயணிகள் அனைவரும் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகின்றனா். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு கட்டாயம் அபராதம் விதிப்பது, உடல் வெப்பநிலை சோதிக்கும் கருவி மூலமாக பரிசோதிப்பது போன்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கிருமிநாசினி மூலமாக அடிக்கடி கைகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்துகிறோம். பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனா்.