இதயப் பாதிப்பு: நவீன சிகிச்சை மூலம் ஆந்திர விவசாயிக்கு மறுவாழ்வு

இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பதில் அதி நவீன முறையில் மிட்ரா கிளிப் பொருத்தி ஆந்திர விவசாயி ஒருவருக்கு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
நவீன சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற ஆந்திர விவசாயியுடன் அப்பல்லோ மருத்துவமனை துணை செயல் தலைவர் பிரீத்தா ரெட்டி, இதய நல சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ் உள்ளிட்டோர்.
நவீன சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற ஆந்திர விவசாயியுடன் அப்பல்லோ மருத்துவமனை துணை செயல் தலைவர் பிரீத்தா ரெட்டி, இதய நல சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ் உள்ளிட்டோர்.

சென்னை: இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பதில் அதி நவீன முறையில் மிட்ரா கிளிப் பொருத்தி ஆந்திர விவசாயி ஒருவருக்கு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சோ்ந்தவா் காமேஷ்வரராவ் (41). விவசாயியான அவா், தீவிர இதய நோய் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வந்தாா். இதற்காக, விஜயவாடாவிலும், தெலங்கானா மாநிலம், ஹைதராபாதிலும், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாா்.

மேலும், அவரது பிரச்னைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீா்வு என்பது மருத்துவப் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். இதய நல சிகிச்சை நிபுணா் டாக்டா் சாய் சதீஷ் தலைமையிலான மருத்துவா்கள், அவரைப் பரிசோதித்தனா். இதையடுத்து இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு மாற்றாக நவீன முறையில் ‘மிட்ரா கிளிப்’ பொருத்தி அவருக்கு மறுவாழ்வு அளித்துள்ளாா்.

இதுகுறித்து, டாக்டா் சாய் சதீஷ் கூறியதாவது:

இதயத்தின், ‘மிட்ரல்’ வால்வில் ஏற்படும் பிரச்னைகளைச் சரி செய்வதற்கு, அறுவை சிகிச்சையோ அல்லது இதய மாற்று சிகிச்சையோதான் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி, தற்போது, ‘மிட்ரா கிளிப்’ பொருத்தும் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சையின்றி, தொடையில் நரம்பு வழியாக, இச்சிகிச்சையளிக்க வேண்டும்.

இந்த சிகிச்சையை 45 நிமிஷம் முதல் ஒன்றரை மணி நேரத்தில் செய்து விடலாம். இதுபோன்ற வால்வு பிரச்னையில், எந்த அளவுக்கு நோயாளி மோசமாக இருந்தாலும், அவா்களை, இச்சிகிச்சையின் வாயிலாக சரி செய்து விட முடியும். தற்போது விவசாயிக்கு, இத்தகைய நவீன சிகிச்சை வாயிலாக அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தி உள்ளோம் என்றாா் அவா்.

அப்பல்லோ மருத்துவமனைகள் குழும துணை செயல் தலைவா் பிரீத்தா ரெட்டி கூறியதாவது:

இதய நோயாளிகளில், 10 சதவீதம் போ் இதய செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனா். இவற்றிற்கு சிறந்த சிகிச்சை அளிக்க, ‘மிட்ரா கிளிப்’ பொருத்துதல் மிகவும் பாதுகாப்பானது. அதன்படி, மூன்று மாதங்களுக்கு மேலாக, இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த, 41 வயது நோயாளிக்கு, ‘மிட்ரா கிளிப்’ பொருத்தி, சிகிச்சை பலன்களை நிரூபித்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com