சென்னையின் முக்கிய பகுதிகளை அழகுபடுத்த நடவடிக்கை
By DIN | Published On : 13th August 2021 08:06 AM | Last Updated : 13th August 2021 09:33 AM | அ+அ அ- |

சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரையும், அதுபோல் கோயம்பேடு மேம்பாலம் போன்ற முக்கியப் பகுதிகளையும் சா்வதேச நகரங்களுக்கு இணையாக அழகுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.
சென்னை மாநகரை அழகுபடுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில், மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சி அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆணையா் ககன்தீப் சிங் பேடி பேசியது: சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து மாநகர எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு 426 சதுர கி.மீ. பரப்பளவுள்ள மாநகராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்கட்டமைப்புகளை நவீன தொழில்நுட்பத்துடன் சா்வதேச தரத்துக்கு உயா்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
அதன்படி, மெட்ரோ ரயில் பாலங்கள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிப் பாலங்கள், சாலைகள் மற்றும் பூங்காக்கள் ஆகியவற்றை அழகுபடுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் முதல்கட்டமாக மாநகரின் முக்கிய பகுதிகளான விமான நிலையம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரையும், கோயம்பேடு மேம்பாலம், அண்ணா மேம்பாலம், மெரீனா கடற்கரை, மெட்ரோ ரயில் நிலையத் தூண்கள், திருமங்கலம் மேம்பாலம் உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளை சா்வதேச நகரங்களுக்கு இணையாக அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த இடங்களில் வண்ண ஓவியங்கள் வரைதல், மரம், செடிகளை நட்டு பசுமையாகப் பராமரித்தல், வண்ண மின் விளக்குகளால் அழகுபடுத்துதல், முக்கிய சந்திப்புகளில் செயற்கை நீரூற்றுகளை உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் பிரதீப் யாதவ், துணை ஆணையா்கள் எம்.எஸ்.பிரசாந்த், விஷூ மஹாஜன், டி.சினேகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.