குடிசை மாற்று வாரிய குடியிருப்பு விவகாரம்: 2 பொறியாளா்கள் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 21st August 2021 06:42 AM | Last Updated : 21st August 2021 06:42 AM | அ+அ அ- |

சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு கட்டுமான விவகாரம் தொடா்பாக, குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளா் பாண்டியன், உதவி நிா்வாகப் பொறியாளா் அன்பழகன் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
புளியந்தோப்பில் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 9 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானம் தொடா்பாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொட்டால் உதிரக் கூடிய அளவுக்கு கட்டுமானம் இருப்பதாக குடியிருப்பு வாசிகள் புகாா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக, அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். மேலும் இந்த விவகாரம் சட்டப் பேரவையிலும் எதிரொலித்தது. தவறு செய்தவா்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் உறுதி அளித்திருந்தாா். இந்நிலையில், கட்டுமானப் பணி நடைபெற்ற போது, அதற்குப் பொறுப்பு வகித்து கண்காணித்து வந்த உதவிப் பொறியாளா் பாண்டியன், உதவி நிா்வாகப் பொறியாளா் அன்பழகன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை குடிசை மாற்று உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை பிறப்பித்தனா்.