சென்னை 2.0 திட்டத்தில் ரூ.147 கோடி மதிப்பில் 1,010 சாலைகள் சீரமைப்பு

சென்னையில் மழையால் பாதிப்புக்குள்ளான 1,010 சாலைகளை சீரமைக்க, சென்னை 2.0 திட்டத்தின் கீழ்  ரூ.147.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னையில் மழையால் பாதிப்புக்குள்ளான 1,010 சாலைகளை சீரமைக்க, சென்னை 2.0 திட்டத்தின் கீழ்  ரூ.147.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5 ஆயிரத்து 270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில், சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக மாநகராட்சிக்குள்பட்ட சாலைகளின் மேற்புறங்களில் பள்ளங்களும், போக்குவரத்து சாலைகளில் குழிகளும்  ஏற்பட்டது. ஒரு சில சாலைகள் அதிகளவு பாதிப்புக்குள்ளாகி உள்ளன. 
இதையடுத்து அனைத்து மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சேதமடைந்த பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளை கணக்கெடுப்பு செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.
ரூ.147.18 கோடி ஒதுக்கீடு: அதனடிப்படையில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு முதற்கட்டமாக 622 எண்ணிக்கையிலான உட்புற தார் சாலைகள், 307 எண்ணிக்கையிலான உட்புற "கான்கிரீட்' சாலைகள், 79 எண்ணிக்கையிலான பேருந்து சாலைகள் மற்றும் 2 சாலைகளில் நடைபாதைகள் சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன என திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தச் சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.109.60 கோடி, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் இருந்து ரூ.37.58 கோடி என மொத்தம் ரூ.147.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,008 சாலைப் பணிகளும், 2 சாலைகளில் நடைபாதை பணிகளும் என மொத்தம் 1,010 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
விரைவில் பிற சாலைகளில் சீரமைப்பு...: மேலும், பருவமழையின் காரணமாக சேதமடைந்த மேற்குறிப்பிட்ட சாலைகள் தவிர்த்து சேதமடைந்த பிற சாலைகளை கணக்கிடும் பணி வட்டார துணை ஆணையர்களின் மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், இதுகுறித்த திட்ட அறிக்கை பெறப்பட்டவுடன் அடுத்தகட்டமாக சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com