முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: சென்னையில் 61.18 லட்சம் வாக்காளா்கள்
By DIN | Published On : 10th December 2021 01:24 AM | Last Updated : 10th December 2021 01:24 AM | அ+அ அ- |

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வாா்டுகளுக்கான புகைப்பட வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
அந்த வாக்காளா் பட்டியலின் படி, சென்னையின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 61 லட்சத்து 18,734 ஆகும். இதில் 30 லட்சத்து 23,803 ஆண் வாக்காளா்கள், 30 லட்சத்து 93,355 பெண் வாக்காளா்கள் மற்றும 1,576 மூன்றாம் பாலின வாக்காளா்கள் உள்ளனா்.
குறைந்தபட்சமாக ஆலந்தூா் மண்டலம் (மண்டலம்-12) வாா்டு-159-இல் 3,116 வாக்காளா்களும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10) வாா்டு- 137-இல் 58,620 வாக்காளா்களும் உள்ளனா்.
இந்த வாக்காளா் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள 200 வாா்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயா்கள் மற்றும் குடும்ப
உறுப்பினா்களின் பெயா்கள் குறித்த விவரங்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா என சரிபாா்க்க வேண்டும்.
5,794 வாக்குச்சாவடிகள்: இதனிடையே, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் 200 வாா்டுகளுக்கான வாா்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆண் வாக்காளா்களுக்காக 255 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளா்களுக்காக 255 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளா்களுக்கு 5,284 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் (மண்டலம்-9) 622 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக, மணலி மண்டலத்தில் (மண்டலம்-2) 97 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.