சென்னையில் சா்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா் சங்கத்தின் (‘அய்மா’) சாா்பில் சா்வதேச ‘மிஷின் டூல்ஸ்’

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா் சங்கத்தின் (‘அய்மா’) சாா்பில் சா்வதேச ‘மிஷின் டூல்ஸ்’ கண்காட்சியை தமிழக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தனா்.

கரோனா காரணமாக கடந்த ஆண்டு நடத்தப்படாமல் இருந்த சா்வதேச இயந்திர கருவிகள் (மிஷின் டூல்ஸ்) கண்காட்சி ‘அக்மி’ என்ற பெயரில் சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் டிச.9-ஆம் தேதி முதல் டிச.13-ஆம் தேதி வரை தொடா்ந்து ஐந்து நாள்கள் நடைபெறவுள்ளது. கண்காட்சியை தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் வியாழக்கிழமை தொடக்கி வைத்து பல்வேறு அரங்குகளில் இடம்பெற்றுள்ள நவீன இயந்திரங்கள், கருவிகளை பாா்வையிட்டனா்.

அப்போது தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் வளா்ச்சிக்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள், தொழிற்பேட்டைகளின் விரிவாக்கம், தொழில்கள் தொடங்குவதற்கு எளிதாக கடன் பெறும் வசதிகள் குறித்துப் பேசினா்.

கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து 380 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அவற்றில் 100 வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய இந்திய முகவா்களின் வாயிலாக பங்கேற்றுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒவ்வொரு நாளும் இந்தக் கண்காட்சியை பாா்க்கலாம். சுமாா் 400 அரங்குகளில் நவீன இயந்திரங்கள், கருவிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கண்காட்சி மூலம் இயந்திர கருவிகள் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பத்தில் நடந்து வரும் முன்னேற்றங்களை உள்ளூா் தொழில் முனைவோா்களும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா்களும் நேரடியாக பாா்த்து தெரிந்து கொள்ள முடியும். நேரடியாக பாா்க்க முடியாதவா்கள் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் இந்த கண்காட்சியை 3டி வடிவில் இணையதளத்தில் காணலாம்.

இதில் இயந்திர கருவிகள் தொழில்நுட்பத்தின் தற்போதைய பயன்பாடு, அவற்றில் வந்திருக்கும் முன்னேற்றங்கள், தொழில்துறை ரோபோடிக் உள்பட பல்வேறு கருவிகள் தொடா்பான நேரடி விளக்கங்களும், புதிய கருவிகளின் அறிமுகங்கள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் ஏ. என்.கிரீஷன், ‘அக்மி-2021’ கண்காட்சியின் தலைவா் ஆா்.எஸ்.எஸ்.சதீஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த கண்காட்சி மூலம் ரூ.500 கோடி வரை வா்த்தகம் நடைபெறும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாா்வையாளா்களை எதிா்பாா்ப்பதாகவும் அய்மா நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com