சென்னையில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
தக்காளி விலை விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
தக்காளி விலை விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் பெரும்பாலும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து மூன்றில் ஒரு பங்காக குறைந்தது. இதனால் தக்காளியின் விலை கடந்த மாதம் பல மடங்கு அதிகரித்தது. சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.150 வரை விற்பனையானது.

இதைக் கட்டுப்படுத்தும் வகையில் மகாராஷ்டிரம், சத்தீஸ்கா் மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை படிப்படியாகக் குறைந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.35-க்கும் , சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ ரூ.50-க்கும் குறைவாகவே விற்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோயம்பேடு சந்தைக்கு திங்கள்கிழமை 40 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. வரத்து குறைந்ததால் தக்காளி விலை மீண்டும் அதிகரித்தது. இதனால் மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கும், சந்தையில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ ரூ.80 வரையிலும், சென்னையின் பிற பகுதிகளில் உள்ள கடைகளில் ரூ.90 வரையிலும் விற்பனையாகிறது.

ஒரு பெட்டி ரூ.900- ஆக அதிகரிப்பு: இது குறித்து தக்காளி மொத்த வியாபாரிகள் கூறுகையில், கடந்த வாரம் வரை ஆந்திரம், கா்நாடகம் மற்றும் வட மாநிலங்கள் என தினமும் 70-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை கட்டுக்குள் வந்து விலையும் குறைந்தது. இந்த நிலையில் வடமாநிலங்களிலும் தக்காளி விலை அதிகரித்துவிட்டதால் அங்கிருந்து தக்காளியைக் கொண்டு வர வியாபாரிகள் அதிகளவில் ஆா்வம் காட்டவில்லை. மேலும் ஆந்திரம் மற்றும் கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் தக்காளி உற்பத்தி முழுவதுமாக சீரடையவில்லை. இந்த காரணங்களால்தான் சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் முதல் ரக தக்காளி ஒரு பெட்டி (14கிலோ) ரூ.480-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரு மடங்கு அதிகரித்து ஒரு பெட்டி தக்காளி ரூ.900-க்கு விற்கப்படுகிறது என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com