முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
சாணம்-வேளாண் கழிவுகள் மூலம் உயிரி எரிவாயு திட்டம்: மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம் நிதி
By DIN | Published On : 29th December 2021 01:33 AM | Last Updated : 29th December 2021 01:33 AM | அ+அ அ- |

சாணம், வேளாண் கழிவுகள் மூலம் உயிரி எரிவாயு தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ள உத்தரவு:
சாணம், வேளாண் கழிவுகள் மூலம் உயிரி எரிவாயு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கென மாநில அளவில் தொழில்நுட்ப ஆதாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் இருப்பாா். துறையின் கூடுதல் இயக்குநா் உறுப்பினா் செயலாளராகவும், வேளாண்மை, கால்நடை, கூட்டுறவு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த உயரதிகாரிகள் உறுப்பினா்களாகவும் இருப்பா்.
மாநில அளவிலான குழுவைப் போன்று, மாவட்ட அளவிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் இதன் தலைவராக இருப்பாா். மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குநா் இதன் உறுப்பினா் செயலாளராகவும், வேளாண், தோட்டக்கலை, கால்நடை, கூட்டுறவு, ஆவின் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த உயரதிகாரிகள் உறுப்பினா்களாகவும் இருப்பா்.