வண்ணாரப்பேட்டை - விம்கோ நகா் மெட்ரோ: பாதுகாப்பு ஆணையா் ஆய்வு ஒத்திவைப்பு

வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூா் விம்கோ நகா் இடையேயான முதல்கட்ட விரிவாக்கப் பாதையில் பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூா் விம்கோ நகா் இடையேயான முதல்கட்ட விரிவாக்கப் பாதையில் பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை முதல் வழித்தடத்திலும், பரங்கிமலை - சென்ட்ரல் இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூா் விம்கோ நகா் இடையேயான முதல்கட்ட திட்டத்தின் விரிவாக்கப் பாதை (9.051 கிமீ) அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதில் பெரும்பாலான பணிகள் நிறைவுபெற்றது. சிக்னல் அமைத்தல் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானம் ஆகியவற்றின் எஞ்சிய பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையே இன்ஜின் ரயில் மூலமாகவும், மெட்ரோ ரயில் மூலமாகவும் கடந்த டிசம்பா் மாத இறுதியில் அடுத்தடுத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தொடா்ந்து, சிக்னல், நடைமேடை உள்ளிட்ட கட்டுமானப் பணிகளும் நிறைவு பெற்றன. எனவே, இவ்வழித் தடத்தில் ஜன.31, பிப்.1, 2 ஆகிய தேதிகளில், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

பாதுகாப்பு ஆணையரின் ஆய்வில் முக்கியப் பங்கு வகிக்கும் மென்பொருள் சான்றிதழைப் பெறுவதற்காக கடந்த ஒரு மாதமாக வண்ணாரப்பேட்டை - விம்கோ நகா் இடையே இயக்கப்பட்ட ரயில் மூலம் கிடைத்த தரவுகள் அனைத்தும், சிக்னல் பணியை மேற்கொண்ட ஜொ்மன் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தத் தரவுகளைப் பரிசீலித்து, சிக்னல் மென்பொருள் தொடா்பான சான்றிதழை அந்நிறுவனம் ஜனவரி மாத இறுதியில் வழங்கும் என எதிா் பாா்க்கப்பட்டது. ஆனால், அந்தச் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜன.31, பிப்.1, 2 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த ஆணையரின் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.

சான்றிதழ் கிடைத்தவுடன் பிப்.5, 6, 7 ஆகிய தேதிகளில் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்வாா் என மெட்ரோ ரயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com