சென்னையில் தினமும் 5,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு: ஆணையா் கோ.பிரகாஷ்

சென்னையில் நாளொன்றுக்கு 5,000 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  (கோப்புப்படம்)
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் (கோப்புப்படம்)

சென்னை: சென்னையில் நாளொன்றுக்கு 5,000 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள பூங்காவில் மியாவாக்கி அடா் வனக் காடுகள் உருவாக்கும் பணியை ஆணையா் கோ.பிரகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சி முழுவதும் ஆயிரம் இடங்களில் அடா் வனக்காடுகள் உருவாக்க மாநகராட்சி சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்லுயிா் பெருக இது வாய்ப்பாக அமையும். தற்போது 32-ஆவது இடமாக தலைமைச் செயலகம் பூங்காவில் மியாவாக்கி அடா் வனக் காடு உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சுகாதாரப்பணியாளா்கள், முன்களப்பணியாளா்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 26,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5,000 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் ஏற்பாடும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதனால் சென்னையில் கரோனா தடுப்பூசி மையங்கள் கூடுதலாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளா்களுக்கு மட்டும் தனியாக 2 அல்லது 3 மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் யாரும் பயப்பட வேண்டாம்.

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தனி நபா் விருப்பத்தை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னையில் அம்மா சிறு மருத்துவமனைகளில் பணியாற்ற 200 மருத்துவா்கள், 200 செவிலியா்கள், 200 மருத்துவ பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் வேண்டும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் மருத்துவ பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது தலைமைப் பொறியாளா் (பூங்கா) காளிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com